ஒழுவிலொடுக்கம்

210. செத்தவரைப் போலத் திரும்பாமற் போகலுமா

செத்தவரைப் போலத் திரும்பாமற் போகலுமா
மெத்திசையு மொன்றென் றிருக்கலுமா – முத்தர் தமக்
கண்டமணுச் சிற்றி லாடரங்கந் தேகமலாற்
கண்டிடுகைக் கேதுமிலைக் காண்.

(இ-ள்.) செத்தவரைப்போலத் திரும்பாமல் போகலும் ஆம் எத்திசையும் ஒன்று என்று இருக்கலும் ஆம் முத்தர் தமக்கு- முத்தர் தமக்குச் செத்தவரைப்போலத் தாம் இருந்து நீங்கிய பதியில் மீட்டும் திரும்பாமல் சேறலும் ஆகும், அஃதன்றி எல்லாம் பரிபூரணமாய்த் தோற்றலின் எமக்கு எல்லாத்திக்கும் ஒன்று தானே என்று ஓரிடத் திருத்தலும் ஆகும்;

அண்டம் அணுச் சிற்றில் ஆடு அரங்கம் தேகம் அலால் கண்டிகைக்கு ஏதும் இலை காண் – அஃதன்றி தேகங்கள் ஆன்மாக்கட்குச் சிற்றில் இழைத்தற்கு இடமெனவும், அண்டம் அவ்வான்மாக்கட்கு மாயா கோரணிக்கூத்தாடற்கு ஓராடரங்கெனவும், காண்பது அல்லாமல் அம் முத்தர் தமக்கு வேறு காண்கைக்கு யாதொரு பொருளும் இல்லை .

(வி-ரை.) உடற்கண்ணிருந்து நீங்கிய உயிர் மீட்டும் வந்து அதனுள் புகாதது போல், தாமிருந்து நீங்கிய பதியில் மீட்டும் வந்து புகாமையின், ”செத்தவரைப்போலத்திரும் பாமற் போகலுமாம்” என்றார். அணு என்பது ஆன்மா.

தேகம் சிற்றிலெனவும், அண்டம் ஆடரங்கெனவும் மாறிக் கூட்டுக.

பிரபஞ்சமெல்லாம் அண்ட பிண்டங்களுள் அடங்கும் ஆகலின், “கண்டிடுகைக் கேதுமிலைக்காண்” என்றார். முத்தர் தமக்கென்பது நடுநின்று இருபாலுங்கொண்டு முடிதலின், இராப்பிச்சைப் பொருள்கொளும் நடுநிலைத் தீபகமும் ஆதல் காண்க.

காண் – அசை.

இத்திருவெண்பாவால் ஞானிகள் செல்வதற்கும் இருப்பதற்கும் தேசமும் இடமும் குறியீடு இன்றென்று அறிவித்தவாறு காண்க.

அந்த ஞானிகள் போகாத ஊர் ஒன்றும் இன்றோ எனின், மேற் கூறுகின்றார்.