அடைப்புள்ளா யாளடர்ந்த வாமையாய்த் திக்கே
யுடுப்பதா யோர்ந்துழல்வார்க் கூரார் – நடைப்பிணமே
யூமைப்பே யாரெனினு மோலமிடுந் தேவர்குழாஞ்
சேமக்கோ லாளிந் திரர்.
(இ-ள்.) அடைப்புள் ஆய் ஆள் அடர்ந்த ஆமை ஆய்த் திக்கே உடுப்பது ஆய் ஓர்ந்து உழல்வார்க்கு ஊர் ஆர்- நேயநிட்டை மாறா திருத்தலின் முட்டைகளை வைத்து அவையங் காக்கும் அடைப்புட் போலாய், தாமிருந்த இடந்தேடிச் சிலர் அன்னதிகளைக் கொடுவந்து நேரே வைத்து வணங்கி உபசாரங்களைக் கூறினும், இந்திரியங்கள் ஐந்தையும் அவற்றிற் செல்லவொட்டாது உள்ளடக்கிக் கொண்டிருத்தலின் ஆள் அடர்ந்த ஆமைபோலாய் ,இவ்வுடையைத் துறந்து திக்கெல்லாம் பரிபூரணமாயுள்ள உடையைத் தம்மைத் தெரியாது சூழவுடுத்திக்கொண்டிருத்தலின் திக்கை உடுப்பதாய், இங்ஙனந் தேர்ந்து உலாவுவார்க்கு ஊரின்கண் உள்ளார், நன்று கூறினுந் தீது கூறினும் உறவரோ பகைவரோ இவர் யாவர்?
நடைப்பிணமே ஊமைப்பேயார் எனினும் ஓலம் இடும் தேவர் குழாம் சேமக்கோல் ஆள் இந்திரர்- அஃதன்றி நடையாடிய பிணம்போல் திரிந்தார் எனினும், ஊமைப் பேயரைப்போல் இருந்தார் எனினும், அவரது மான்மியத்தை தேவர் கூட்டங்களெல்லாம் அறிந்து சூழ்ந்து கொண்டு தோத்திரம் பண்ணாநிற்பர் இந்திரர்கள் அவர்க்கு ஏவற்பணிவிடை செய்யும் சேமக்கோ லாள்களாய்த் திரிவர்.
(வி-ரை.) அடைப்புள் முட்டையைச் செட்டையால் அடக்கிக்கோடல் போல், அண்டங்களை எல்லாம் தமது பூரணத்தால் மறைத்துக்கொண்டிருப்பர் என்பதும் ஆம்
ஆள் அடர்ந்தபோது ஆமை ஐந்துறுப்பையும் அடக்கிக்கோடல்போல், விடயங்கள் நேர்படின் அவர் ஐந்தையும் அடக்கலின், இங்கனம் உவமை கூறினார். உளர் என்பது ஊரின் கண் உள்ளார் மேல் ஏறிற்று. ஓர்ந்துழல்வார்க் கூரினுள்ளா ரியாவரெனக் கூட்டுக.
கருவிச்சேட்டைகள் இறந்து நிற்றலின், “நடைப்பிணம்” என்றும், மௌனாநந்தமா யிருத்தலின், “ஊமைப்பேயர்” என்றும், ஒன்றினும் அவாவற்ற மெய்ஞ்ஞானி தேவருலகத்தும் இன்மையால், “ஓலமிடுந்தேவர்குழாம்” என்றும், “சேமக்கோலாளிந்திரர்” என்றுங் கூறினார்.
அந்த ஞானிகட்கு ஏவல் செய்வது மிகவும் சிறப்பாகலின், அவர் பிடிக்குங்கோலை, “சேமக்கோல்’” என்றார். உபேந்திரர் உளர் ஆகலின், இந்திரரென்று பன்மையாகக் கூறினார்.
இத்திருவெண்பாவால் ஞானிகள் மகிமையை மானிடர்கள் அறியார் எனினும், தேவர்கள் அறிந்து ஏவல் புரிவார் என்று அறிவித்தவாறு காண்க.
இங்ஙனம் மகிமையுடைய ஞானிகள் எத்தேசத்திற் செல்வர் எவ்விடத்திருப்பர் எனின், மேற்கூறுகின்றார்.