தன்னையரு ளாலறிந்து தானறிந்த தெல்லாம் போ
யிம்மைப் பெருவாழ்வை யெய்தினர்க்கு – முன்னே
நடந்தறிந்த போத நசிப்பே யிருக்கு
மிடம்புறங்கா டென்ப திலை.
(இ-ள்.) தன்னை அருளால் அறிந்து தாம் அறிந்தது எல்லாம் போய் இம்மைப் பெருவாழ்வை எய்தினர்க்கு- கருவிகள் முப்பத்தாறையுங் கடந்து தம்மை அருளால் அறிந்து அங்ஙனந் தம்மையறிந்த பின்னர்த் தம்மை அறிவித்த அருள் தரிசன முதலாய் தாமறிந்தவை எல்லாம் நீங்கி இம்மைக் கண்ணே சுகாதீதமாகிய வாழ்வை அடைந் தோர்க்கு ,
முன்னே நடந்து அறிந்த போதம் நசிப்பே இருக்கும் இடம் புறங்காடு என்பது இலை-கருவிகளையும் தன்தரிசன முதலியவற்றையும் இது இது என்று அறிந்து அவற்றை நீங்கிச்சென்று சிவத்தை அறிந்து அதனுள் இறந்த போதம் மீண்டு எழாது அதனைக் கெடுப்பதே இருக்கும் இடமன்றி இது சுத்தமாகிய இடம் என்பதும் இது புறங்காடென்பதும் இன்று.
(வி-ரை) தற்றரிசன முதலியவற்றுள் உறுதியாய் நின்றோர் மறுமைக்கண் அடையும் சுகாதீத முத்தியை இவர் இம்மைக்கண்ணே அடைந்தாராகலின், “இம்மைப் பெருவாழ்வை யெய்தினர்” என்றார்.
எல்லாவற்றையும் நீங்கிச் சென்றமையால், “நடந்து” என்றார்.
இத்திருவெண்பாவால் ஞானிகட்குப் போதம் இறந்திருக்கும் இடமே கருத்தன்றி மற்றொன்றும் இன்றென்று அறிவித்தவாறு காண்க.
இங்ஙனம் இருந்த ஞானிகட்குச் சாதிநடை சமயநடை இன்றோ எனின், மேற்கூறுகின்றார்.