காமாதி விட்டுக் கரமே கலமாகிப்
பூமீதே கைகாலைப் போர்த்துறங்கி – நாமகுணஞ்
சாதி கருமமெனும் வாதனையிற் றாக்கற்றார்க்
கேது சமயமென லாம்.
(இ-ள்.) காமம் ஆதி விட்டுக் கரமே கலம் ஆகிப் பூமீதே கை காலைப் போர்த்து உறங்கி- காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்களை யெல்லாம் விட்டு நீங்கி, கரமே உண்கலனாகி மனை தோறும் பிச்சை ஏற்றுண்டு பொதுச்சாவடி புறந்திண்ணை பாழுங்கோயில் முதலியவற்றுள் பூமியாகிய மலரணை மீது கரங்களையும் தாள்களையும் போர்வையாகப் போர்த்துக் கொண்டு ஆநந்த நித்திரை பண்ணி
நாமம் குணம் சாதி கருமம் எனும் வாதனையில் தாக்கு அற்றார்க்கு ஏது சமயம் எனல் ஆம் – பெயர் குணம் சாதி கிரியை என்னும் இவற்றின் வாசனையோடும் தாக்கற்ற மெய்ஞ்ஞானிகட்குச் சாதி யாதென்று கூறலாம்? சமயம் யாதென்று கூறலாம்! ஆகலின், இவற்றின் நடைகளும் அவர்க்கின்று.
(வி-ரை.) காமாதி விட்டு என்றமையான், மாயா குணம் ஒன்றும் இலர் என்பதாயிற்று.
நாமாதிகளில் தாக்கற்றாரென்னாது அவற்றின் வாசனையிற்றாக்கற்றார் என்றமையான், அவற்றை மறந்து போயினார் என்பதாயிற்று. “சாதி கருமம்” என்றமையான் சாதி யேதெனலாம் என்று வருவிக்கப்பட்டது. இத் திருவெண்பாவால் ஞானிகள் நடை சாதிசமயங்களோடு ஒவ்வாதென்று அறிவித்தவாறு காண்க.
ஞானிநடை சாதிநடை சமநடைகளோடு ஒவ்வாது இங்ஙனம் இருப்பது என்னை எனின், மேற்கூறுகின்றார்.