ஞானிக் குலகநடை யென்று நாம் பார்க்கிற்
சீனக்கண் ணாடியொடு தீபமுமா – மேனோர்க்கும்
விப்பிரட்ட மேபோல வேறாம் விகாரியோ
வப்பராக் கன்றியறி யான்.
(இ-ள்) ஞானிக்கு உலகநடை என்று நாம் பார்க்கின் சீனக் கண்ணாடியொடு தீபமும் ஆம் – ஞானியினது நடையை உலகரது சாதிநடைபோலென்று யாம் பார்ப்போம் எனின், அவனது நடை இருளில் தீபத்தைக் கொண்டு பொருள் காண்பது போலுமாம், இவரது நடை அவ்விருளில் சீனக் கண்ணாடி கொண்டு பொருள் காண்பது போலுமாம்; ஆகலின், இவரது நடையோடு அவனது நடை ஒவ்வாது ஆனால் சமயிகள் நடையோடு ஒவ்வா திருப்பது எங்ஙனம் எனின்
ஏனோர்க்கும் விப்பிரட்டமே போல வேறு ஆம் விகாரியோ அப்பராக்கு அன்றி அறியான்-சமயிகள் தத்தம் கடவுளரைத் தமக்குரிய நூல் கூறியவாறே வழிபடுவர்; அவன் அக்கடவுளரை எல்லாம் கடந்துநின்ற பரிபூரண சிவத்தை அடைந்தவன் ஆகலின் அச் சமயிகள் நடைக்கும் அவன் நடை சுத்தப்பிரட்டமேபோல ஒவ்வாது வேறாம்; இங்ஙனஞ் சாதிநடை சமயநடை ஒவ்வாதாயின் இவ்விருவகை நடையும் இல்லாத பாமரர் போலும் அவன் விகாரியோ எனின், அவன் சிவனைப்போலும் நிருவிகாரி, அவன் நிருவிகாரியேயானால் விகாரமற்று இருக்கவேண்டுமே அன்றிக் கரபிச்சை வாங்கி உண்டல் முதலிய நடை நிகழ் வானேன் எனின், அங்ஙகனங் காயத்தின் நிகழ்ந்ததாயினும் அவன் நிருவிகாரமாகிய பராக்கே அன்றி இவ்விகாரமாகிய பராக்கினுள் ஒன்றினையும் அறியான்.
(வி-ரை.) உலகநடை என்றதனால், ஞானி நடை வருவிக்கப்பட்டது.
ஞானி நடை தீபம்போலெனவும், உலகநடை சீனக் கண்ணாடி போலெனவும் மாறிப் பொருள் கொள்.
இருளில் தீபத்தால் பொய்ப்பொருள் தோன்றுவ போல் ஞானதீபநடையால் மெய்ப்பொருள் தோன்றும் என்பதும், அவ்விருளில் சீனக்கண்ணாடியால் பொய்ப் பொருள் சிறிதும் தோன்றாதது போல், மாயாந்தகாரத் தோடுஞ் செய்யும் சாதிநடையான் மெய்ப்பொருள் சிறிதும் தோன்றாதென்பதும் இவ்வுவமைகளாற் காண்க.
“விகாரியோ என்றமையானும், அப்பராக்கன்றியறியான்” என்றமையானும், அவற்றிற்கிடையில் வேண்டுவன வருவிக்கப்பட்டன.
இத்திருவெண்பாவால் ஞானி மாயா தீதமான சிவஞானம் உடையன் ஆகலின், சாதிசமய நடையாகிய மாயைக்குட்படானென்று அறிவித்தவாறு காண்க.
ஞானியினது நடைமுதலியவற்றை அறியக்கூடாதோ எனின், மேற்கூறுகின்றார்.