அஞ்சனக்கண் ணாளர்க் கருநிதியந் தோன்றுவபோ
னஞ்சலகை மாற்றியதி னாணுவர்போல் – வெஞ்சாப
வீடுபோற் றோன்று மருண் மேலிட்டால் விப்பிரட்டா
மோடையின் மண் டூகமொப்போர் க்கு.
(இ-ள்.) அஞ்சனக்கண் ஆளர்க்கு அருநிதியம் தோன்றுவபோல் அஞ்சலகை மாற்றியதி னாணுவர்போல் வெஞ்சாப வீடுபோற் றோன்றும் அருள் மேலிட்டால் –பாதாள அஞ்சனம் போட்டுப் பார்க்கும் கண்ணினை யுடையார்க்கு அரிய சேம நிதி தோன்றுவது போலும், தம்மே லேறியிருந்த விடத்தையும் பேயையும் மாற்றின் அதனால் (தெளிவு பிறந்து முன்னர் என் செய்து கொண்டோம் என்று அவற்றால் மயங்கிச்செய்த செயல்களை நாடி நாணுவாரைப்போலும், கொடிய சாபத்தினால் வருந்தினோர்க்கு அச்சாபம் விடு தலையானாற்போலும் தோன்றும், திருவருள் மேலிட்ட காலத்து.
நஞ்சு அலகை மாற்றின் அதில் நாணுவர்போல் வெஞ்சாப வீடுபோல் தோன்றும் -,
விப்பிரட்டு ஆம் ஓடையில் மண்டூகம் ஒப்போர்க்கு — அத்திருவருள் மேலீட்டைப்பெற்ற ஞானிநடை ஓடையில் மூழ்கிக் கிடக்கும் தவளை போல் மாயாசமுத்திரத்தில் மூழ்கிக் கிடப்போர்க்குப் பிரட்டுநடைபோல் தோன்றும்,
(வி-ரை.) மண் மறைப்பால் தெரியாதிருந்த நிதி அஞ்சனம் போட்டுப்பார்த்த கண்ணாளர்க்கு அம்மண் ஊடுருவி அந்நிதி தோன்றுவது போல், மலமறைப்பால் தெரியாதிருந்த அருள் அவ்வருட்கண்ணால் பார்த்தபோது அம்மலமறைப்பு நீங்கி எங்கும் தானாய்த் தோற்றுமாகலின், “அஞ்சனக் கண்ணாளர்க் கருநிதியந் தோன்றுவபோல் என்றும்; விடமும் பேயும் நீங்கியவிடத்துத் தெளிவு வந்து முன்னர் அவற்றால் மயங்கிச்செய்த செயல்களை நாடி நாணுவாரைப் போல், சகல கேவலங்களை நீங்கி அருளைக் கண்டவிடத்து முன்னர் அவற்றால் மயங்கிச் செய்த செயல்களை நாடி நாணம் வருமாகலின், “நஞ்சலகை மாற்றி னதினாணு வர்போல் என்றும், தேவனாயிருந்துளான் சாபத்தால் விலங்காதிகளாயிருந்து பின்னர் அச்சாபம் விடுதலையான போது தேவத்துவத்தை அடைந்தாற்போல, அளவிறந்த காலம் மலதேகம் தானாயிருந்தவர் இப்போது அத்தேகம் நீங்கித் தன்னை அறிவென்று உள்ளபடி அறிந்தமையால், வெஞ்சாப வீடுபோல்” என்றுங் கூறினார்.
“ஓடையில் மண்டூக மொப்போர்க்கு” என்றது, கிணற்றுத்தவளை நாட்டு வளப்பமறியுமோ என்னும் உலக வழக்கக்குறிப்பால் மாயையில் மூழ்கிக் கிடப்போர்க்கு ஞானிகடை தெளியுமோ என் றறிவித்தது.
இத்திருவெண்பாவால் திருவருள் மேலிட்டவிடத்து வரும் அநுபவமும், அதனை உடையோரும் ஞானிகள் என்பதும், அவரது நடையை மாயையுடையோர் அறியார் என் பதும், அறிவித்தவாறு காண்க.
நீர் ஈண்டுக் கூறியவாறே துறவும் ஞான நடையுமுடையோரை ஞானிகளென்பது அன்றி இவை இல்லாரையும் ஞானிகள் என்பது என்னை எனின், மேற் கூறுகின்றார்.