ஒழுவிலொடுக்கம்

218. அவரவரைப் போலிருப்பர் தாமவரா கார்போ

அவரவரைப் போலிருப்பர் தாமவரா கார்போ
லிவரவர்க்கொப் பில்லை யெனினு – முவமை சொலின்
வேசிபணம் வெய்யோன் வீணை வெளிவிசிறி
யாசியர்போ லென்கினுமா வர்.

(இ-ள்.) அவர் அவரைப்போல் இருப்பர் தாம் அவர் ஆகார்போல் இவர் அவர்க்கு ஒப்பு இல்லை எனினும் உவமைசொலின்- குடும்பத்தோடு கூடியிருந்தும் ஞானிகளா யிருப்போர் அறிவினால் அக்குடும்ப நிவிர்த்தியாயிருந்த ஞானிகளைப்போலே யிருப்பர், இக் குடும்பத்தோடும் இருந்த ஞானிகள் தாம் நடையினால் அக்குடும்ப நிவர்த்தியாயிருந்த ஞானிகளைப்போல் ஆகார், அதுபோல, இந்தக் குடும்பிகள் அந்தக்குடும்பத்தோடும் இருந்த ஞானிகளுக்கு நடையினால் ஒப்பர், அறிவினால் இந்தக்குடும்பிகள் அந்தக்குடும்பத்தோடும் இருந்த ஞானிகட்கு ஒப்பிலர் எனினும், இன்னும் அந்த ஞானிகட்கு உவமை கூறுமிடத்து,

வேசி பணம் வெய்யோன் வீணை வெளி விசிறி யாசியர்போல் என்கினும் ஆவர்- வேசிபோல் என்று கூறினும், பணம் போல் என்று கூறினும், வெய்யோன் போல் என்று கூறினும், வீணை போல் என்று கூறினும், வெளிபோல் என்று கூறினும், விசிறிபோல் என்று கூறினும், யாசியர் போல் என்று கூறினுஞ்சரியாவார்.

(வி-ரை.) வேசி தன்மேல் நசைகொண்டு வந்தார் மேல் தானும் நசைகொண்டாள் போலும் வாக்குக் காயங்களிற் காட்டி மனதில் அவர்மேல் நசையின்றிப் பொருள் மேல் நசைகொண்டிருப்பது போல், மனைவி முதலிய குடும்பத்தார் தம்மேல் நசையுற்றிருப்பத் தாமும் அவர்மேல் நசையுற்றார் போலும் வாக்குக் காயங்களிற் காட்டி, மனத்தில் அவர்மேல் நசையின்றி மெய்ப்பொருள் மேல் நசையுற்றிருத்தலின், வேசி என்றும்,

பணம் எவர் எவர் எமதெமதென்று அபிமானிப்பினும் தனக்கு அவர்மேல் அபிமானம் அற்றிருத்தல்போல், சுற்றத்தார் நட்பு முதலியோர் எம்மவர் எம்மவர் என்று அபிமானிப்பினும் தாம் அவர்மேல் அபிமானம் அற்று, நிர்விகாரிகளாய் இருத்தலின், பணம் என்றும்;

வெய்யோனால் உலகத்தார் தொழிற்படினும் இவர் செய்யும் நன்று தீது அவனுக்கின்றாயது போல், தமது வாக்குக் காயங்களில் யாது நிகழினும் இவற்றான் வரும் இதாகியங்களில் தாம் சாராதிருத்தலின், வெய்யோன் என்றும்;

வீணை வாசியாதிருந்தபோதும் வாசித்து விடுத்தபோதும் சும்மா இருந்து வாசிக்கும்போது அவன் பாடும் பாட்டின்படி தான் சொல்வதே அன்றி மற்றொன்றும் சொல்லாது ஒழிதல்போல், ஒருவர் ஓர் காரியம் வந்து பேசாமுன்னரும் பேசி ஒழிந்த பின்னரும் தாம் ஓர் காரிய விசாரணை பண்ணாது சும்மா இருந்து, காரியக்காரர் வந்து பேசும் போது அவர் பேசும் காரியப் பேச்சுமாத்திரம் பேசி மற்றொன்றும் சொல்லாது ஒழிதலின், வீணை என்றும்;

வெளி எல்லாவற்றிற்கும் இடங்கொடுத்திருந்தும் அவற்றுள் தாக்கற்று நிற்றல்போல் குடும்பத்திற்கெல்லாம் தாம் பிரதானமாயிருந்தும் அவற்றோடும் தாக்கற்றிருத்தலின், வெளி என்றும்,

விசிறி தன்னை எடுத்து விசிறிக் கொள்வார்க்குப் பயன் கொடுப்பதன்றி, அவரால் தனக்குப் பயன் வேண்டாதிருத்தல்போல், தம்கைக் கொண்டு பிறர் பயன்படுவது அன்றி அவரால் தனக்குப் பயன் வேண்டா திருத்தலின், விசிறி என்றும்,

யாசியர் குற்றமுடையரையும் குணமுடையரையும் குணமாகப் புகழ்தல் போல், இவர் குற்றம் உடையாரையும் குணம் உடையாரையும் சமனாகக் கண்டு நன்மொழி கூறலின் யாசியர் என்றும் கூறினார்.

“போலென்கினும்” என்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக.

இத்திருவெண்பாவால் துறந்துள ஞானிகளது வாக்குக்காயங்களில் நிகழும் ஞான நடைக்கு அவர் அதீதமாயிருந்தது போல், இங்ஙனம் குடும்ப சகிதராயிருந்த ஞானிகளது வாக்குக் காயங்களில் நிகழும் உலக நடைக்கும் இவர் அதீதமாயிருப்பரென்று அறிவித்தவாறு காண்க.

இங்ஙனங் குடும்பத்தோடு கூடியிருந்தும் பற்றற்றிருப்போரை ஞானிகளென்பது சுபாவம், சிவிகை கவிகை முதலியவற்றோடும் அரசர் போல வாழ்கின்றோரையும் எங்ஙனம் ஞானியென்று சொல்வது எனின், மேற்கூறு கின்றார்.