உருகு பரமசுக வுல்லாச நோக்குந்
திருமுகமும் புன்முறுவற் றேசுந் – திருநீறுந்
தற்பாவ மாண்ட சரீரத்தி லோர்சாத்து
மற்றே வெறுமனழ காம்.
(இ-ள்) உருகு பரமசுக உல்லாச நோக்கும் திருமுகமும் புன்முறுவல் தேசும் திருநீறும்– உள்ளமுருகப்பண்ணா நின்ற பரமசுக உல்லாசத்தோடுங் கூடிய திருநோக்கமும் அவ்வின்பக்களிப்பால் தெய்வத்தாமரை மலர்ந்தது போல விளங்கா என்ற திருமுகமும், அவ்வின்பம் பொங்கி மேன்மேலெழலால் தோன்றும் அந்தகாசப் பிரகாசமும் திருமேனி முழுதும் பூசுவதாகிய திருவெண்ணீற்றழகும்
தற்பாவ மாண்ட சரீரத்தில் ஓர் சாத்தும் அற்றே வெறுமன் அழகு ஆம்-பஞ்சபூத குணங்களாகிய தற்பாவம் இறந்து நின்ற திருமேனியில் கூடியும் கூடாதிருந்த ஞானிகளது திருமேனியில் தோற்றும் அவை அங்ஙனந் தோற்றுவன அன்றி, அவற்றான் அவர்க்கு யாது சிறப்பும் இன்று, அவை வாளா தோற்றும் அழகுகளாம்.
(வி-ரை) ஆநந்தம் தோற்றும்போது உள்ளம் நெக்குருகத் தோன்றும் ஆகலின், “உருகுபரமசுகம்” என்றும், சடசித்துக்களாயுள்ள பொருள்களெல்லாம் அவர்க்குச் சுகசொரூபமாய்த் தோற்றும் ஆகலின், அவர்நோக்கை “பரமசுக வுல்லாச நோக்கு” என்றுங் கூறினார்.
* வினையேன் மனத்துத் தேனையும் பாலையுங் கன்னலையு மமுதத்தையு மொத் தூனைய மென்பினையு முருக்கா நின்ற வொண்மையனே” என்பதும் அது.
“பூநாளுந்தலைசுமப்ப” என்றது போல் தோற்றும் என்பதைச் சாத்தும் என்று அருமை தோன்றக் கூறினார்.
உல்லாசநோக்கு முதலியன, அவர் கருத்தாய்த் தோற்றாது, இயல்பாய்த் தோற்றலின், “அற்றே வெறுமன ழகாம்” என்றார். வெறுமன் என்பது கிராமியச்சொல்.
இத்திருவெண்பாவால் ஞானிகளைப் புகழ்ந்து கூறியவாறு காண்க.