வாடன் மணம்போல வருந்தா வயிராக்யத்
தோடு மெலிந்த வுடம்புடனே – கூடார்
நிருவிடயா நந்தசுக நீங்காத நோக்குந்
திருமுகமு மென்னை விடா தே.
(இ-ள்.) வாடல் மணம்போல் வருந்தா வயிராக்யத் தோடு மெலிந்த உடம்புடனே கூடார்-வாடற்பூவின் மணஞ் சிறிது தோன்றுதல்போல் சிறிது தோன்றும் பிராரத்த வாசனையோடும் போதத்தால் வருந்திச் செய்யாத பாசவயிராக்கியத்தோடுந் தளராநின்ற திருமேனியுடனே கூடியிருந்துங் கூடாராகிய ஞானிகளது.
நிருவிடய ஆநந்தசுகம் நீங்காத நோக்கும் திருமுகமும் என்னை விடாது – நிருவிடயமாய்த் தோற்றும் ஆநந்தமாகிய சுகம், உள் போல் புறத்து நீங்காத அவ்வாநந்தத் திருநோக்குந், திருமுகமும், எனதுள்ளத்தை எப்போதும் விட்டு நீங்கா.
(வி-ரை.) “வாடன் மணம்போல்” என்ற உவமையால் சிறிது பிராரத்த வாசனையோடும் என்பது வருவிக்கப்பட்டது. வருந்திச்செய்யும் போதம் உடையாரது வயிராக்கியம்போல் அன்றி இவர்க்கு இயல்பாய்த் தோற்றலின், “வருந்தா வயிராக்கியம்” என்றார்.
விடயாநந்தம் போல் எதிரீடற்ற இடத்தில் தோற்றலின், “நிருவிடயாநந்தம்” என்றார்.
ஏ – அசை .
இத்திருவெண்பாவால் அவரது அருமை கூறியவாறு காண்க.
ஆயின், இந்த ஞானிகட்குப் பெயர் யாது எனின், மேற் கூறுகின்றார்.