ஒழுவிலொடுக்கம்

236. ஒருகுடைக்கீழ் வாழுலகத் தோர்க்குறும்பூ ருண்டோ

ஒருகுடைக்கீழ் வாழுலகத் தோர்க்குறும்பூ ருண்டோ
வருணிழற்கீழ் வாழ்வா ரறிவு – கருவிகளிற்
போனாலேன் சேற்றுத் தூள் போலோ பருந்து நிழல்
போனாற்போற் றோயாமற் போம்.

(இ-ள்.) ஒரு குடைக்கீழ் வாழ் உலகத்தோர் குறும்பு ஊர் உண்டோ அருள் நிழற் கீழ் வாழ்வார் அறிவு கருவிகளில் போனால் என் சேற்றுத்தூள் போலோ – பூமியெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள்வோன், உலகத்து வாழ்வோர்க்குக் குறும்பூரால் துன்பம் உண்டாமோ? அதுபோல், எங்கும் பரிபூரணமாய் நின்ற திருவடி நிழற்கீழ் ஆநந்தச் செல்வத்தோடும் வாழ்வார் அறிவு விடயங்களிற் சென்றாலும் என்னை? அவ்வறிவிற்கு அவ் விடயங்களான் வரும் மயக்கம் யாதும் இன்று, மாயைக் கீழ் வாழ்வார் அறிவு போல் அவரறிவு சேற்றுக்குள் தூள் போல் அழுந்துமோ?

பருந்து நிழல் போனால்போல் தோயாமல் போம் பருந்தின் நிழல் ஒன்றில் தோய்ந்துந் தோயாது போனாற் போல் அவரறிவு அவ் விடயங்களில் தோய்ந்துந் தோயாது நீங்கும் என்று அறிதி.

(வி-ரை) ஒரு குடைக்கீழ் வாழ்வார் மற்று யாதோர் ஊருக்குச் செல்லினும், அவ் அரையனது ஆணையால் குறும்பு செய்வாரும், இவரான் வரும் துன்பமும், அவர்க்கு இன்றாயது போல், திருவடிக்கீழ் வாழ்வார் அறிவு விடயங்களிற் சென்றாலும், அத் திருவடிப் பரிபூரணமாய் நிற்றலின், இவ் விடயங்கள் மயக்குவதும், தான் மயங்குவதும் இவ்வறிவிற்கு இன்றாம் ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.

பருந்தின் நிழல் தோய்ந்தவாறே நில்லாது விரைவில் நீங்குதல் போல், அவ்வறிவு விடயங்களில் தோய்ந்தவாறே மயங்காது விரைவில் நீங்கித் திருவடிக்கீழ் நிற்றலான் இங்ஙனம் உவமை கூறினார். பருந்தினை அவர்க்கும், அதன் நிழலை அவரது அறிவிற்கும் உவமையாகக் கூறியவாறு காண்க. இத்திருவெண்பாவால் விடயங்கள் அவர் அறிவை மயக்காது என்பதும், அவ் விடயங்களில் அவரறிவு தோயாது என்பதும், அறிவித்தவாறு காண்க.