நெய்யுண்ட நாயென்ன நீரி னிழலென்ன
மையுண்ட கண்போன் மனைவாழ்வார் – துய்ய
விருளால் விலையேறு மாணிக்க மெல்லாப்
பொருள் போல வல்லாப் பொருள்.
(இ-ள்.) நெய் உண்ட நாய் என்ன நீரில் நிழல் என்ன மை உண்ட கண்போல் மனைவாழ்வார் -நெய்யை உண்டு மீட்டுங் கக்காநின்ற நாய்போலுந், தடாக தீரத்தில் நிறகும் மரம் மேல்முகமாய் நிற்கவும் அத்தடாக நீரில் கீழ் முகமாய்த்தோன்றும் அம்மரநிழல் போலும், பிறர்க்கு அழகாய்த் தனக்குக் கரிப்பாயிருக்கும் மையுண்ட கண் போலும் அந்த ஞானிகள் இல் வாழ்க்கையோடுங் கூடியுங் கூடாதிருந்து வாழ்வார். இங்ஙனம் வாழ்வாராயின் ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் பேதம் என்னை எனின்
துய்ய இருளால் விலை ஏறும் மாணிக்கம் எல்லாப் பொருள் போல அல்லாப்பொருள் – இருளைத் துறந்து பிரகாசித்தலான், இருளான் விலையேறும் நிருமலமாயுள்ள மாணிக்கமணி அவ்விருளான் மறையும் மற்றெல்லாப் பொருள்களைப்போலும் அல்லாதபொருள், அதுபோல், இல்வாழ்க்கை இருளால் தாம் மறைந்திருப்பாரைப் போலுமன்றி, அவ்வில்வாழ்க்கை இருளைத் தமது ஞானப் பிரகாசத்தால் நீக்கி நின்று விளங்குவர் என்று அறிதி.
(வி-ரை.) நெய்யை உண்டபின் வயிற்றில் எட்டுணையேனும் தங்காது மீட்டும் கக்கலான், அந்நெய்யினது சாரம் அதன் உடலிற் சாராதது போல, விடயங்களைத்தாம் அற்று அநுபவித்துச் சிவத்திற்கு ஆக்கலான், அவ்விடய வாசனை இவரைச்சாராது ஆகலின், “நெய்யுண்ட நாயென்ன” என்றும்,
கரையின் கண் மரம் மேல்முகமாய் நிற்கவும், அதனது நிழல் நீரின்கண் கீழ்முகமாய்த் தோற்று தல்போல், சகலத்தையும் கடந்த சிவத்தைத் தாம் பிரியாதிருக்கவும், மனைக் கண் இருத்தல் போல் தோற்றலின், “நீரினிழலென்ன” என்றும்;
பிறர்க்கழகாய்த் தனக்குக்கரிப்பதாயிருக்கும் மையுண்ட கண்போல், பிறர்க்கு மனைக்கண் வாழ்கின்றது போல் தோற்ற, தமக்கு இப் பிராரத்தவாசனை என்றைக்கு ஒழியும் என்று வெறுப்பாய்த் தோற்றலின், “மையுண்ட கண்போலும்” என்றுங் கூறினார்.
மாணிக்கம் பகலைப்பற்ற இரவில் மிகவும் பிரகாசிப்பதுபோல், மெய்ஞ்ஞானிகட்குத் துறவைப்பற்ற இல்வாழ்க்கையில் ஞானம் மிகவும் பிரகாசிக்கும் ஆகலின், இருளால் விலையேறு “மாணிக்க மெல்லாப் பொருள் போல வல்லாப்பொருள்” என்றுங் கூறினார்.
ஞானியும் அஞ்ஞானியும் குடும்பத்தோடிருப்பதானால், அவர்க்குப் பிறப்பு இன்றாயது என்னை, இவர்க்குப் பிறப்பு உண்டாயது என்னை எனின், மேற்கூறுகின்றார்.