ஒழுவிலொடுக்கம்

239. தொடும்போ சுழல்காற்றுத் தூளம் போற் றொட்டு

தொடும்போ சுழல்காற்றுத் தூளம் போற் றொட்டு
விடும் போது மங்ஙனே விட்டு – நடந்தாலு
மாகாய நீங்காம லாடியது போலடங்கு
மேகாந்திக் கெங்கிருந்தா லென்.

(இ-ள்.) தொடும்போது சுழல்காற்றுத் தூளம் போல் தொட்டு விடும்போதும் அங்ஙனே விட்டு நடந்தாலும்- விடயங்களைப் பற்றும் போதுஞ் சுழல்காற்றுத் தூளத்தைப் பற்றுவ  போற்பற்றி, அவ்விடயங்களை விடுக்கும் போது, அச்சுழல் காற்றுத் தூளத்தை விடுப்பது போல விடுத்து, இங்ஙனம் ஞானியினதறிவு விடயங்களைப் பற்றி விடுத்துச் சென்றாலும்,

ஆகாயம் நீங்காமல் ஆடி அதுபோல் அடங்கும் ஏகாந்திக்கு எங்கு இருந்தால் என்-தூளத்தைப்பற்றும்போதும் ஆகாயத்தை விட்டு நீங்காமற் பற்றி, சுழன்றாடும் போதும் அவ்வாகாயத்தை விட்டு நீங்காது ஆடி, அத்தூளத்தைவிடுத்து அவ்வாகாயத்துள் அடங்கும் அச்சுழல் காற்றுப்போல, விடயங்களைப் பற்றும் போதுந் திருவருளை விட்டு நீங்காது பற்றி, அநுபவிக்கும் போதும் அவ்வருளை நீங்காது அநுபவித்து, அவ்விடயங்களை விடுத்து, அவ்வருளில் அடங்கும் ஏகாந்தியாகிய ஞானிக்கு இரு வகை அறங்களில் எவ்வறத்திருந்தால் என்னை? அவர்க்கோர் பற்றும் இன்று.

(வி-ரை.) “ஆகாயநீங்காமலாடி” என்றதனால், தூளத்தைப் பற்றும் போதும் ஆகாயம் நீங்காமற்பற்றி என்பது வருவிக்கப்பட்டது. “அது போலடங்கும்” என்றமையால், ஆடி என்றதன் பின்னர் அடங்குமென்பது வருவிக்கப்பட்டது.

இங்ஙனஞ் செய்தாலும் அவரிருக்கும் இடம் திருவருள் ஆகலின், “ஏகாந்தி” என்றார்.

இங்ஙனங் குடும்பத்திருந்தும் அதன்கட் சார்பு ஒழிந்து நின்றார்  யாவர் எனின், மேற்கூறுகின்றார்.