துடைதட்ட லொன்றே துயிற்கும் விழிக்கும்
படிகத் திருண்மணிக்கேன் பற்று – மடிபார்த்துக்
கூடப்போங் கள்ளனைப்போற் கூடாக் குடும்பக்கூத்
தாடிக்கேன் மேற்பிறப்புண் டாம்.
(இ-ள்.) துடை தட்டல் ஒன்றே துயிற்கும் விழிக்கும் படிகத்து இருள் மணிக்கு என் பற்றும் – துயிலும் பருவம் உடையோன் துயிறற்குத்தொடைதட்டலும், விழிக்கும் பருவம் உடையோன் விழித்தற்குத் தொடை தட்டலும் ஒன்றேயாம், அதுபோல், ஞானி மனைவி முதலிய குடும்பத்தார் வந்து சருவுந்தோறும் அகமுகமாய்த் தற்போத ஒழிவில் நின்று ஆநந்த நித்திரைபண்ணுவான், அஞ்ஞானி தன் மனைவி முதலிய குடும்பத்தார் வந்து சருவுந்தோறும் சகமுகமாய்நின்று மயக்கத்தில் அழுந்துவான், ஆயின் ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் பேதம் இங்ஙனம் ஆயினும், அந்த ஞானிக்குக் குடும்பத்தில் இருக்கின்றேன் என்னும் வாசனையாயினும் தோன்றாதோ எனின், படிகத்தில் பற்றும் பஞ்சவன்னமாகிய இருள், மாணிக்க மணிக்கு ஏன் பற்றும்? அதுபோல, அக்குடும்பந்தானாய் நின்ற அஞ்ஞானிக்கு ஏறும் வாசனை குடும்பத்திற் பற்றின்றி நிற்கும் ஞானிக்கு ஏன் ஏறும்? இங்ஙனங் குடும்பவாசனையும் ஏறா திருத்தலான்
அடிபார்த்துக் கூடப்போம் கள்ளனைப்போல் கூடாக் குடும்பக் கூத்தாடிக்கு மேல் பிறப்பு ஏன் உண்டாம்– பொருள்களைக் களவு கொடுத்தோர்கள், அவன் அடிப்பார்த்துச் செல்ல, அப்பொருள் களவுகொண்டோனாய் அவரோடுங் கலந்துகொண்டு அவ்வடிபார்த்துக் கூடச்செல்லும் அக்கள்வனைப்போல், குடும்பத்தார்க்குச் சுகதுக்கம் வந்தகாலை அவரைப்போல் தானும் அவர்க்குக் காயத்தால் பூரிப்பும் வாட்டமும் உடையவனைப்போற் காட்டி, அவரோடுங் கூடி நின்று மனத்தான் அவரோடுங் கூடாத குடும்பக் கூத்தாடியாகிய அந்த ஞானிக்கு மறுபிறப்பு ஏன் உண்டாம்?
(வி-ரை.) தொடைதட்டலால் துயில்வதும் விழிப்பதும் அவர்க்கு இயல்பாயின போல், குடும்பத்தால் அகமுகப்படுவதும் சகமுகப்படுவதும் இவர்க்கு இயல்பாயின என்பதுங்கொள்க.
பார்ப்பான் தோட்டி வேடம் போட்டு நடிப்பினும் தன்னை வேறு கண்டு நின்றாற்போல், இவன் குடும்பிபோல் இருப்பினும், தன்னை வேறுகண்டு நின்றான் ஆகலின், “குடும்பக்கூத்தாடி” என்றார்.
நீர் இங்ஙனங் கூறிய ஆற்றான் ஞானிக்கு இல்லறமுந் துறவறமும் சரியோ எனின், மேற்கூறுகின்றார்.