ஒழுவிலொடுக்கம்

251. கருவியுதிப் பிற்சகல கேவலத்தைக் காட்டி

கருவியுதிப் பிற்சகல கேவலத்தைக் காட்டி
யருளுதிப்பு மங்கது போலாக்கி – யிரவுபகற்
தாக்காத சுத்தத் தலத்து நாம் வைக்க நீ
யாக்கா தெமக்குப் பரம்.

(இ-ள்.) கருவி உதிப்பின் சகல கேவலத்தைக் காட்டி அருள் உதிப்பும் அங்கு அதுபோல் ஆக்கி- கருவிகள் முப்பத்தாறுங் கூடிநின்ற சாக்கிரத்தில் உனதறிவின் விகற்பமாய் வந்தடுப்பது சகலமென்றும், மயக்கமாய் வந்தடுப்பது கேவலமென்றும் உனக்கறிவித்து, அச்சகல கேவலங்களை நீங்கப்பண்ணி உன்னை உள்ளபடி அறிவித்து, இங்ஙனம் உன்னை அறிவித்த பின்னர்த்தோன்றுந் திருவருள் தரிசனத்திலும், இவ்வருளைச் சகலமென்றும் இது கழன்றுதோன்றும் பரையோகத்தைக் கேவலமென்றும், முற்கூறிய சகல கேவலங்களைப்போல் உனக்கநுபவமாய்த் தரிசிப்பித்துப் பின்னர்,

பகல் இரவு தாக்காத சுத்தத் தலத்து உனை நாம் வைக்க எமக்குப் பரம் நீ  ஆக்காது –அச் சகல கேவலங்களும், இச்சகலகேவலங்களும் ஆகிய பகலிரவுகளும் தாக்காது நின்ற சுகாதீதமாகிய சுத்தநிலையிடத்து உன்னை நாம் கொடுசென்று வைக்க எமக்குப் பரம், ஈண்டு கூறிய இருவகைச் சகல கேவலங்களினும் உன் தற்போதத்தை முன்னிட்டு உண்டாக்காது எம்மை முன்னிட்டுக்கொண்டு செல்வது உனக்குப்பரம். இங்ஙனஞ் சென்றியேல் உனக்கு அச்சுத்தநிலை வருமென்று அறிதி.

(வி-ரை.) ஆன்மபோத எதிரீட்டினும் எதிரீடற்ற விடத்துந் தோன்றுஞ் சகல கேவலங்களைப்போல், இவை நீங்கித் தன்னை அறிந்த இடத்தில் தோன்றும் திருவருளையும் பரையையும் எதிரீடாயும் எதிரீடற்றும் தரிசித்தலின், “அங்கது போலாக்கி” என்றார். ”எமக்குப்பரம்” என்றமையால், உனக்குப் பரம் என்றது வருவிக்கப்பட்டது.

ஞானாசிரியர் மாணாக்கனுக்கு உபதேசிக்குங்கால் தம்மைச் சிவமாகக் கூறவேண்டும் ஆகலின், “எமக்குப் பரம்” என்றார்.