கருப்ப நிலத்தைக் கரண்டு திரி வார்க்குச்
சருக்கரையே வாயிற் சனித்தாங் – கிருத்திவிடு
மெந்தலைமை யென்பிரா லீனர்வாக் கென்னவே
தந்தலைமை மாண்ட தலம்.
(இ-ள்.) கருப்ப நிலத்தைக் கரண்டு திரிவார்க்குச் சருக்கரையே வாயில் சனித்தாங்கு இருத்திவிடும் –சுவையை விரும்பிக் கரும்பறுத்தொழித்த அக்கருப்ப நிலத்தைத் தமது பற்கொடு கறண்டுகொண்டு திரிவோர்க்குத் தெய்வகதியாய்ச் சருக்கரை தானே வந்து அவரது வாயில் தோன்றிய முறைபோல, வீட்டின்பத்தை விரும்பித் தற்போதத்தைக் கொண்டு சரிதாதிகளைச் செய்வோர், இந்நூலிற் கூறிய முறையே சரிதாதிகளை விட்டு நீங்கி, தற்போதத்தைப் பின்னிட்டு அருட்போதத்தை முன்னிட்டுச் சென்றார் எனின், இவ்வருட்போதமே அவரை அவ்வீட்டின்பத்தின் கண் அழுத்திவிடும், ஆகலின்
எம் தலைமை என்பீரால் ஈனர் வாக்கு என்னவே தம் தலைமை மாண்ட தலம் – ஓர் காரியஞ் செய்யுமிடத்து எமது வலியினாற் செய்வோமென்று கூறும் அறிவீனர் வாக்குப்போல, அவ்வீட்டின்பத்தை எமது போதவலியாற் சென்று அடைவோமென்று கருதிச் சொல்வீரானால், அங்ஙனம் நீர் கருதிச் சொல்வதே உமது ஞான மேம்பாடற்ற இடம் என்று அறிந்து, நீரும் இந்நூல் நெறிமுறையே செய்வீர்.
(வி-ரை.) சரிதாதிகளை விட்டு இந்நூல்நெறிச்சென்றால் போதம் ஒழியும், இப்போதம் ஒழியில் ஆநந்தந்தானே தோன்றும், ஆகலின், “கருப்ப நிலத்தைக் கரண்டு திரிவாருக்குச் சருக்கரையே வாயிற்சனித்தாங்கு” என்று உவமை கூறினார்.
உந்தலைமை என்பது தந்தலைமை என்று முன்னிலைத் தன்மை தழீஇ வந்தது. பன்னூல்களையும் விட்டு இந்நூல் நெறிச்சென்றார்க்கே இன்பங்கிடைக்கும் என்பதும் ஆம்.
“போதப்புரவி” என்னும் திருவெண்பாமுதல் இவை ஏழு திருவெண்பாவானும், ஆநந்த அறிவுநிலையும், துறவு நிலையும், சிவயோக நிலையும், சுத்தநிலையும், பஞ்சமலம் அறு க்கும் பஞ்சாக்கரநிலையும், முத்திநிலையும், இந்நூல் நெறிச் சென்றார்க்கே வீட்டின்பங் கிடைக்குமென்னும் முடிபு நிலையும் அறிவித்தவாறு காண்க.