ஒழுவிலொடுக்கம்

51. நினைப்பு மறப்பறுத்து நீயறலை நீக்கா

நினைப்பு மறப்பறுத்து நீயறலை நீக்கா
துனைக்கரைய நில்லங்ஙனங்ங – னெனக்கதற்றல்
விப்பிரட்ட மந்திரட்டம் வேலையிலே போட்டசுரை
செப்படித்தன் ஞானச் சிறை.

(இ-ள்.) நினைப்பு மறப்பு அறுத்து நீ அறலை நீக்காது உனைக்கரைய நில் அங்ஙன் அங்ஙன் எனக்கதற்றல்- முன்னர் நினைப்பு மறப்பு ஆகிய சகல கேவலங்களை அறிவித்து நீக்கி, தன்னை அறிவித்து, பின்னர்த் தனக்கு உயிர்க்குயிராய் நின்ற திருவருளைத் தரிசிப்பித்து, இத்திருவருளோடுங்கூடி அறிகின்ற போதம் தற்சுதந்திரமாய் ஒன்றைப் பகுத்தறியாது ஆகலின், அருளை முன்னிட்டுக்கொண்டு தற்போத ஒழிவைப்பெறுதற்கு உபாயங்கூறி, அதனை நீக்காது, அந்நினைப்பு மறப்பு ஆகிய சகல கேவலங்களுள் வைத்து, உன் போதங்கரைய நீ அப்படி நில், அப்படி நில் என்று மாணாக்கனுக்கு ஓர் நிட்டைபோலுங் கூறுதல்,

விப்பிரட்டம் மந்திரட்டம் வேலையிலே போட்ட சுரை செப்படித்தல் ஞானச்சிறை – மிகவும் பிரட்டமும், மந்திரத்தால் ஒருவனுக்கு விநோதங்காட்டலும், கடற்கண் போட்ட சுரை ஓடும், செப்படி வித்தையும், ஞானத்திற்குத் தடையாய் உள்ள மலபோதமும் ஆம்.

(வி-ரை.) அந்த நிட்டை கூடுவோர் ஞானமும் அன்றி முதற்செய்த கிரியையாதிகளும் அன்றி உபயபிரஷ்டராய் கருவிகளோடும் மயங்கலின், “விப்பிரட்டம்” என்றும், ஒருவன் மந்திரத்தால் விநோதவித்தை தோற்றுவது போல், உள்ளே நானாவாகிய மாயா விநோதங்கள் தோற்றலின், “மந்திரட்டம்” என்றும், சுரை ஓடு ஓர் துறைக்கண் சேராது அலையோடு மறிதல் போல், அறிவு ஓர் நிலை நில்லாது நினைவோடுஞ் சுழல்வதனால், “வேலையிலே போட்டசுரை” என்றும், ஓர் பந்து முன் தோற்றிப்பின் அதில் பற்பல பந்து தோற்றுதல் போல், ஓர் காட்சி போல் முன் தோற்றி அது முற்றும் நில்லாது பற்பல காட்சியாய் விரிதலின், “செப்படித்தல்” என்றும், இங்ஙனந் தோற்றுவன சகல கேவலபோதம் ஆகலின், “ஞானச்சிறை” என்றுங் கூறினார். அங்ஙனங் கூறியது நிட்டை அன்று ஆகலின், கதற்றல் என்றார்.

இத்திருவெண்பாவால் மாணாக்கனுக்குச் சகல கேவலங்களை முன்னர் அறிவித்து நீக்கி, பின்னர்ப் போதம் ஒழித்தற்கு உபாயங் கூறாது, அச்சகல கேவலங்களுள் அந்நிட்டை கூறுதல் ஆகாதென்று அறிவித்தவாறு காண்க.