ஒழுவிலொடுக்கம்

52. சத்தாதி தத்துவம் போய்த் தானுமெதிருங்கழன்றால்

சத்தாதி தத்துவம் போய்த் தானுமெதிருங்கழன்றால்
சித்தாந்த வேதாந்தச் சீர்மையிலை – முத்தி
யநிர்வசன மின்ப வதீதமெனி லாங்கே
பினமிடுதல் கன்மம் பிளாய்.

(இ-ள்.) சத்தாதிதத்துவம் போய்த்தானும் எதிரும் கழன்றால் சித்தாந்த வேதாந்தச் சீர்மை இலை- சத்த முதலிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கி அவற்றின் முடிவில் நின்ற தானும் திருவருள் தரிசனமுதல் ஆநந்தாநுபவம் ஈறாய் அவ்வருளால் தான் அறியாது அறியும் அநுபவங்களாகிய எதிரும்கழன்று, ஆநந்தாதீதப்பட்டால், இரண்டென்று கூறும் சித்தாந்தச்சிறப்பும் ஒன்றென்று கூறும் வேதாந்தச்சிறப்பும் அங்கு இல்லை;

முத்தி அநிர்வசனம் இன்ப அதீதம் எனின் ஆங்கே பினம் இடுதல் கன்மம் பிளாய்– அங்கனம் அதீதப்பட்ட முத்தி சொல் இறந்த சுகாதீதம் என்றால், பிள்ளாய் ஒன் றென்றும் இரண்டென்றும் அம்முத்தியைப் பின்னப்படக் கூறுதல் போதச்சேட்டை ஆம்.

(வி-ரை.) சத்தாதி விடயங்களின் மேல் ஆன்மாவுக்கு அநிச்சைபிறந்தபோது சோத்திராதி பஞ்சேந்திரியங்களும் விடயங்களை அபகரியாது நீங்கும். இவை நீங்கவே, முன் அபகரித்தபோது வசன கமன தான விசர்க்காநந்தங்களை விடயீகரிக்கும் வாக்காதி கன்மேந்திரியங்கள் ஐந்தும் நீங்கும். இவை நீங்கவே, அப்பத்து இந்திரியங்கட்கும் இடமாய் நின்ற பூதங்கள் நீங்கும். இவை நீங்கவே, விடயங்களைப்பற்றி நிச்சயித்து அபிமானித்துச் சிந்தித்து  நிற்கும் அந்தக்கரணவாசனை நீங்கும். இது நீங்கவே, விடயங்களைப் புசித்தற்கு ஓரெல்லையும், அவ்வெல்லையில் உண்டாம் விட யப்பயனும், அவ்விடயத்தைப் புசிக்கும்போது ஓர் காலங்களினும் அறியாதது போலப் புதுமையும், மேலும் இவ்விடயம் அனுபவிக்கவேண்டும் என்னுங் கருத்தும்        உண்டாக்குங் காலதத்துவமும் நீங்கும்.

இது நீங்கவே, விடயங்களைப் புசிக்கும்போது இவனுக்கு இவ்வளவு புசிப்பென்னும் மட்டறிந்து வரைந்து நிற்கும் நியதி நீங்கும். இது நீங்கவே, ஆன்மா விடயங்களை இச்சித்துப் பகுத்தறிந்து பற்றி அநுபவிக்க அவ்வான்மாவுக்கு இச்சாஞானக் கிரியைகளை எழுப்பும் இராகம் வித்தை கலை என்னும் இம் மூன்றும் நீங்கும். இவை நீங்கவே, ஆன்மாவைப் பஞ்சேந்திரியங்களினும் கறங்குபோற் கொண்டு சுழற்றும் புருடன் நீங்கும்.

இது நீங்கவே, அவ்விடயங்களைப் புசிக்குமிடத்து அவ்விடயம் என்றுந் தான் என்றும் இரண்டற மயக்கி நிற்கும் மாயை நீங்கும். இங்ஙனம் வித்தியாதத்துவங்கள் நீங்கவே; இவற்றைப் பிரோகம் பண்ணுஞ்சுத்த தத்துவங்கள் ஐந்தும் நீங்கும்.

இங்ஙனம் தத்துவம் முப்பத்தாறும் நீங்கினவிடத்து ஆன்மாவின் இச்சை, பெத்தத்தில் விடயத்தின் மேல் சனித்ததுபோல், சிவத்தின் மேல் சனிக்கும். ஞானம், விடயாநந்தம் அசுத்தம் துக்கம் அநித்தியம் என்றும், சிவாநந்தம் சுத்தம் சுகம் நித்தியம் என்றும், பகுத்தறிந்து கொண்டு நிற்கும், கிரியை பழைய பழக்கத்தால் விடயங்கண்மேற் செல் லினும் அவற்றிற் செல்லாது மறுத்து நீங்கிச்சிவத்தையே நாடி நிற்கும். ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகள் சிவன் ஆன்மாக்களை முத்தியிலே அடைவிக்க வேண்டும் என்னும் இச்சைப்படி நிற்பது ஆகலின், திருவருள் பதியும். இத்திருவருளை முன்னிட்டுக்கொண்டு அறியும் பரைதரிசன முதலிய அநுபவங்களாகிய எதிரும், அவைகளை அறிந்த தானும், கழன்று ஆநந்தாதீதப்பட்டால், இரண்டென்றும் ஒன்றென்றும் கூறக்கூடாது ஆகலின், “சித்தாந்த வேதாந்தச் சீர்மையிலை” என்றார்.

கன்மம் என்பது சேட்டைமேலேறிற்று.

ஆன்மா சத்தாதிகளைத்துரிசற விடுத்தபோது மற்றைத்தத்துவம் முப்பத்தொன்றும் இங்ஙனம் நீங்கலின், சத்தாதிகளை முன்வைத்துக் கூறினார்.

முத்தியை அறிவிப்பது வேதாகம முடிவாகலின், “சீர்மை” என்றும், அம்முத்தியில் அதனை அறிந்து கூறும் போதம் இன்மையால் “அநிர்வசனம்” என்றுங் கூறினார்.

மருவிய பொறியி லொன்று மாபூத மைந்தி லொன்றுங்

கருவிக ணான்கு நீங்காக் கலாதிக ளைந்துங்கூடி

யொருபுலனுகருமிந்தவொழுங்கொழிந்துயிருமொன்றைத்

 தெரிவுறா தவனொழிந்தத் திரள்களுஞ் செயலி லாவே”

என்னும் சிவப்பிரகாசத்தானும்,

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு”.

என்னும் திருவள்ளுவரானும் மற்றும் வருவனவற்றானுங் காண்க.

இத்திருவெண்பாவால் சித்தாந்த முத்தியோ வேதாந்த முத்தியோ உண்மை என்று ஐயுறுகின்ற மாணாக்கனுக்குக் காண்பானும் காட்சியும் அற்றவிடத்து இரண்டுஞ்சரி யென்று அறிவித்தவாறு காண்க.