ஒழுவிலொடுக்கம்

57. சன்மார்க்கமே முதலாய்த் தாதமார்க் கத்தளவுந்

சன்மார்க்கமே முதலாய்த் தாதமார்க் கத்தளவுந்
தன் மார்க்கமான வெங்கள் சம்பந்தன் – றன்னைத்
துறவி யரசு சுகியோகி போகி
அறவன் மறவனென லாம்.

(இ-ள்.) சன்மார்க்கமே முதலாத் தாதமார்க்கத்து அளவும் தன்மார்க்கம் ஆன எங்கள் சம்பந்தன் தன்னை – ஞான முதல் சரியை ஈறாய்ச் சொல்லப்பட்ட நான்கு பாதத்திற்கும் உரித்தாகிய சன்மார்க்க முதல் தாதமார்க்கம் ஈறாய்ச் சொல்லப்பட்ட இந்நான்கினையும் தமது அருள் நெறியால் எமக்குண்டாகச் செய்தருளிய எமது சுவாமிகளாகிய திருஞான சம்பந்தப்பிள்ளையாரை,

துறவி அரசு சுகி யோகி போகி அறவன் மறவன் எனல் ஆம் – எல்லாவற்றோடுங் கூடியிருந்தும் அவற்றோடு தாக்கற்று நிற்றலின் துறவி என்றும், சகல புவனங்களையுந் தாமேயிருந்து நடத்தலின் அரசு என்றும், ஆநந்தமயனாயிருத்தலின் சுகி என்றும், சிவயோகத்தை அநுக்கிரகித்தலின் யோகி என்றும், ஆன்மபோதங்களை விழுங்கிக் கோடலின் போகி என்றும், சகல கருமங்களும் ஓர் வடிவாயிருத்தலின் அறவன் என்றும், அடைந்தோர் மும்மலங்களைக் கோறலான் மறவன் என்றுஞ் சொல்லலாம்.

(வி-ரை.) சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம் தாதமார்க்கம் என நான்கு. இவற்றுள், சன்மார்க்க மாவது, நீயே நான் நானே நீ என்பது. சகமார்க்கமாவது, தோழனும் தோழனும் என்பது, சற்பத்திர மார்க்கமாவது, பிதாவும் புத்திரனும் என்பது, தாதமார்க்கமாவது, ஆண்டவனும் அடியானும் என்பது.

ஞானம் பெற்றோரைப் புகழ்ந்து கூறிய பின்னர், இத்திருவெண்பாவால் அந்த ஞானத்தை அருளிச்செய்தற்குத் தலைவராகிய பிள்ளையாரைப் புகழ்ந்து கூறியவாறு காண்க.