ஒழுவிலொடுக்கம்

64. சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி

சிவமயம்

         இரண்டாம் அதிகாரம்

சத்திநிபாதத்துத்தமரொழிவு

நால்வகைச் சத்திநிபாதத்து உத்தமர்களது பிரபஞ்சப் பற்றொழிவை முறையே கூறினமையால் இவ்வதிகாரத்திற்குச் சத்திநிபாதத்துத்தமரொழிவு என்று பெயர் ஆயிற்று.

இவர் இந்நூற்கு உரியவர் ஆகலின் வேதாகமப்பொதுவிலுபதேச வதிகாரத்தின் பின் இவ்வதிகாரம் வைக்கப்பட்டது.

சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி
வருமா றெனக்களித்த வள்ளல் – குருராயன்
ஞானத்திற் பக்குவர்க ணால்வர்க் குபதேச
மானத் தையுநிகழ்த்தி னான்.

(இ-ள்.) சரியாதி நான்கினுக்கும் சாலோகம் ஆதிவரும் ஆறு எனக்கு அளித்த வள்ளல் குருராயன்- சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் இந்நான்கு பாதத்திற்கும் சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்னும் இந்நான்கு பதமும் வரும் முறைமையை எனக்கு அருளிச்செய்த வள்ளல் குருராயனாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார்,

ஞானத்தில் பக்குவர்கள் நால்வர்க்கு உபதேசம் ஆனத்தையும் நிகழ்த்தினான்-ஞானபாதத்திற்கு உரிய மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்னும் இப்பக்குவம் உடையார் நால்வரது இலக்கணமும், அவர்க்கு உபதேசிக்கு முறைமையும் அருளிச்செய்தார்.

(வி-ரை.) முப்பத்தாறு தத்துவங்களையும் நியதிகளைவது சரியை, அவற்றை அறிந்து நீங்கிய தன்னை அருளால் அறிந்து அவற்றின் முடிவில் நிற்பது சாலோகபதம். ஆங்குத் தனக்கு அறிவித்த அவ்அருளைத் தரிசித்துப் பின் அருள் என்றும் தான் என்றும் பிரித்து நோக்காது தற்போதத்தை அடக்குவது கிரியை; அவ்வருளே வடிவாயிருப்பது சாமீபபதம்.

அங்ஙனம் இருந்து தற்போதஞ் சிறிதும் தோன்றாது ஒழிப்பது யோகம்; ஆங்குப்பரை தானாயிருப்பது சாரூபபதம். அப்பரை நீக்கத்தில் தோன்றும் ஞானாந்தத்தைப் பெறுவது ஞானம்; அந்த ஆநந்தத்தில் அதீதப்படுவது சாயுச்சியபதம்.

ஆகலின், ‘’சரியாதி நான்கினுக்குஞ் சாலோகமாதி” வருமாறு இங்ஙனம் எனக்கொள்க.