ஒழுவிலொடுக்கம்

1. வேதா கமப்பவுரி வீசுங் களாசநிலை

சிவமயம்

ஒழுவிலொடுக்கம்

உரை பாடம்

முதல் அதிகாரம்

பொதுவிலுபதேசம்

ஆசாரியர் அநாசாரியர் இலக்கண முதலியவற்றையும், இந்நூலிற் கூறிய கருத்தெல்லாவற்றையும் தொகுத்துப் பொதுவான் உபதேசமாகக் கூறினமையான், இவ்வதிகாரத்திற்குப் பொதுவில் உபதேசம் என்று பெயராயிற்று.

வெண்பா

1.   வேதா கமப்பவுரி வீசுங் களாசநிலை
ஆதார வெற்பி லபிடேகம் – போதத்
திருளிலெழு பாநு வெனதொழிவி லின்பக்
கருணைபொழி வானெடுத்த கை .

(இ-ள்.) எனது ஒழிவில் இன்பக்கருணை பொழிவான் எடுத்த கை – எனது போதநாசத்தின் கண்ணே அருளாநந்தத்தைப் பொழியாநின்ற பிள்ளையார் உயர எடுத்துச் சுட்டோடு மெய்ப்பொருளைக் காட்டிய திருக்கரமானது, 

வேதாகமப் பவுரி வீசும் களாசநிலை- வேதாகமங்களினது பவுரிக்கூத்தினைப் பிரம்போடுங் கைவாரங்கொண்டு வீசி நிறுத்தும் ஓர் உண்மைநிலை;

ஆதார வெற்பில் அபிடேகம் – ஆறாதாரங்களாகிய பொருப்பரையன் முடியிற் சூட்டும் ஓர் மகுடம்;

போதத்து இருளில் எழு பாநு – ஆன்மபோதத்தின் கண்ணதாகிய ஆணவ இருளைக்கிழித்து எழாநின்ற ஞான சூரியன்.

(வி-ரை.) அரங்கின்கண் நடிக்கின்ற கூத்தர் பலருக்கும் முதல்வனாகிய கூத்தன் வந்து கூத்தைக் கைவாரங் கொண்டு நிறுத்தி, அவ்வரங்கின்கண் உள்ள குறுமன்னியர்கட்கெல்லாம் முதல்வனாகிய மகாமன்னியனையே புகழ்ந்து சுட்டிநின்றாற்போல, வேதாகமங்கள் கூறிய பல சமய நெறிகளையும் அச்சமயங்கட்குரிய கடவுளரையும் கடந்து நின்று, அக்கடவுளருக்கெல்லாம் முதல்வனையே பிள்ளையார் பரஞானக்கண்ணினால் உணர்ந்து புகழ்ந்து சுட்டி நின்றமையால் “வேதாகமப் பவுரி வீசுங்களாசலை” என்றும், நிராதாரமாகிய அருளினின்று மீதானமாகிய மெய்ப்பொருளில் சுட்டோடும் அதீதப்பட்டு நின்றமையால் “ஆதார வெற்பிலபிடேகம் ” என்றும், ஆன்மபோதத்தை மறைத்த ஆணவ இருளை நீக்கிச் சிவத்தை அறிவிக்குந் திருவருளைப்போல் இறைவனைப் பிறருக் கறிவித்தமையால் ”போதத்திருளி லெழுபாநு” என்றுங் கூறினார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

 காடுடையசுடலைப்பொடிபூசியென்னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த

பீடுடைய பிரமாபுரமேவியபெம்மானிவனன்றே. 

என்னுந்திருக்கடைக்காப்பான் மெய்ப்பொருளைத் தரிசித்துச் சுட்டிப் புகழ்ந்து நின்றபோது திருவுள்ளம் மெய்ப்பொருள் கிருபாநோக்கம் வைக்க அக்கிருபாநோக்கத்தின் வழித்தாய்ச் சென்று சிவத்தில் அதீதப்பட்டு நின்றார் என்பதும், பிறர்க்கறிவித்தார் என்பதும், முறையே “எனதுள்ளங்கவர்கள்வன்” என்பதனானும், ‘பெம்மானிவனன்றே” என்பதனானுங் காண்க.

இத்திருக்கடைக் காப்பு பிள்ளையார் ஞான போனகம் உண்டருளியபோது அருளிச்செய்யப்பட்டது.

பிரளயாகலர்க் கநுக்கிரகித்தலும் இது.

வேதாகமங்களை முதற்பொருளாக்கி அவை ஒன்றோடொன்றொவ்வாது கூறும் பல பேத சமயநெறிகளைக் கூத்தாக்கினார்.

ஆதாரம் ஆறையும் ஊடுருவியின்ற சுழிமுனையை மேருவென்றும், இடை பிங்கலைகளை அதனை வலம் வருஞ்சூரியசந்திரரென்றும் யோகிகள் கூறுவர், ஆகலின் “ஆதாரவெற்பு” என்றார். முடிகூறினமையால் வெற்பென்னும் அஃறிணை உயர்திணையாகக் கூறப்பட்டது.

“கை’ என்பதை மூன்றிடத்துங் கூட்டுக.

கைவாரங் கொள்ளுதல்-கூத்தை நிறுத்தற்பொருட்டு ஓகோ என்னும் அடுக்குமொழி கூறிக்கரம் உயர எடுத்து வீசுதல்.

களாசம் – பிரம்பு. பிரம்போடும் வீசுமெனக் கூட்டுக.

இத்திருவெண்பா குரு தோத்திரம்.