ஒழுவிலொடுக்கம்

76. பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துமல மாயைக்

பரிசித்துஞ் சிந்தித்தும் பார்த்துமல மாயைக்
கருமத்தை யெல்லாங் கழற்றிச் – சரிதாதி
வாதனையாம் போத மயக்கத்தை வாக்காலே
போதை செய்து போக்கிவிடப் போம்.

 (இ-ள்.) பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் மலம் மாயை கருமத்தை எல்லாம் கழற்றி- பறவை முட்டையைச் செட்டையாற் பரிசித்தல்போல் மாணாக்கனைக் கரசரணங்களால் பரிசித்தும், ஆமை கரைக்கண் இருந்த முட்டையைத் தன் மனத்திற் பாவித்தல்போல் அவனைத் தமது அருளுருவாய்ப் பாவித்தும், மீன் தனது சினையைப் பார்த்தல்போல் அவனைத் தமது கிருபைப்பார்வையாற் பார்த்தும், ஆணவமலம் மாயாமலம் கன்மமலமாகிய இவையெல்லாம் நீக்கி,

சரிதாதி வாதனை ஆம் போதமயக்கத்தை வாக்காலே போதை செய்து போக்கி விடப்போம் – சரியை கிரியை யோகங்களைச் செய்யும் வாசனை ஆகிய தற்போத மயக்கத்தை நீக்குதற்கு ஏதுவாகிய உபதேசமொழிகளைத் திருவாக்கால் போதித்து நீக்கப்போம்.

(வி-ரை) யோகத்தைப் பாவனையுள் அடக்கி, நூலை வாக்கில் அடக்கி தீக்கை ஆறையும் ஈண்டு நான்காய்க் கூறினார்.

இத்திருவெண்பாவால் ஞானாசாரியர் மாணாக்கனுக்குத் தீக்கையால் மும்மலங்களையும் தற்போதத்தையும் நீக்கு முறைமையை அறிவித்தவாறு காண்க.