காலமறை தேசமறை கன் மறைபோற் காண்பாரும்
பாலுணும்புள் ளிப்பிமீன் பக்கிதீக் – காலு
மிரும்பினீர் மின்னலிலே யேற்றபணம் பார்ப்பார்
தரும்பொருளைக் கொள்ளுவார் தாம்.
(இ-ள்.) காலமறை தேசமறை கல்மறைபோல் காண் பாரும் – முன் ஓர்காலத்து ஓர்பொருளை அறியாதிருந்து பின் ஓர்காலத்து அதனை அறிந்து கொள்ளும் காலமறை போலும், ஓர் தேசத்து அறியாதிருந்த பொருளை ஓர்தேசத்து அறிந்துகொள்ளும் தேசமறைபோலும், முன் மணியென்று அறியாதிருந்தும் பின் அதின் நோட்டம் அறிவா ரோடும் பழகி மணி என்று அறிந்துகொள்ளும் கல்மறை போலும், ஆசாரியர் அநுக்கிரகித்த பொருளை அறிந்து கொள்ளுவாரும் உளர்; (அஃதன்றி),
பால் உணும் புள் இப்பி மீன் பக்கி தீக்காலும் இரும் பின் நீர் மின்னலிலே ஏற்றபணம் பார்ப்பார் தரும்பொருளைக் கொள்ளுவார் தாம் – பாலுண்ணும் அன்னப்புள் போலும், சிப்பிபோலும், மீன் உண்ணுங் கொக்குப் போலும், உலையில் நெருப்பெழக் காய்ந்த இரும்பின் நீர்போலும், மின்னலொளியில் ஏற்கப்பட்ட பணநோட்டம் அறிவார் போலும், அவரருளிச்செய்த பொருளை அங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் பக்குவரும் உளர்.
(வி-ரை.) ஆசாரியர் அநுக்கிரகித்த பொருள் அக்காலத்துத் தோற்றாதிருந்து சின்னாட்குப் பின்னர் தம்முள்ளே தெரிந்து கோடலால் காலமறை என்றும், அவர் கொடுத்த நூலில் தெரியாதிருந்து அந்நூற்பொருளைக்கூறும் மற்றோர் நூலில் தெரிந்து கோடலால், தேசமறை என்றும், தாம் கற்ற நூல் கற்றாரோடும் பழகித்தெரிந்து கோடலால், கன்மறைபோல் என்றும் உவமை கூறினார்.
அன்னம் நீரை நீக்கிப்பாலை உண்டாற்போல் சரியாதிகளை நீக்கி ஞானமொழியைக் கோடலான், பாலுண்ணும்புள் என்றும், சிப்பி சோதிமழைக்கு அங்காத்திருந்து துளிவிழுந்த மாத்திரத்தில் வாய்மூடிக்கொள்ளுதல் போல் எப்போது கூறுவார் என்று இதயம் மலர்ந்து கேட்டு அங்கனங்கேட்ட பொருளை உள்ளடக்கிப் பயன்படுத்திக் கோடலான், இப்பி என்றும்,
கொக்குத் துறைக்கண் அசைவற நின்று மீன் வந்துழிக் கவருதல்போல் சித்திரப்பாவை போல் அசைவற இருந்து பயன் தருமொழி வருந்தோறும் ஏற்றுக்கோடலான், மீன்பக்கி என்றும், இரும்பு தான் ஏற்கும் நீர் மாத்திரம் எடுத்துக்கொண்டு அதனை மீள விடா திருத்தல்போலத் தமக்கு வேண்டிய உபதேசமொழிகளை ஏற்றுக்கொண்டு மீளவிடா திருத்தலான், இரும்பினீர் என்றும், கட்கூர்மையால் விரைந்து மின்னல் ஒளியில் பணம் பார்ப்பது போல் அறிவுக்கூர்மையால் அதிசீக்கிரத்தில் கூறிய மொழிகளின் அருத்தமெல்லாம் அறிந்து கோடலின், மின்னலிலே யேற்ற பணம் பார்ப்பார் என்றுங் கூறினார்.
காலமறையாதி மூன்றற்கும் இன்ன காலத்து இன்ன பொருள் உளதென்றும், இன்ன தேசத்தில் இன்ன பொருள் உளதென்றும், இன்ன மலைக்கு அப்பால் இன்ன பொருள் உளதென்றும், தமக்கு ஆப்தனாயுள்ளவன் கூற அம்மொழியை உண்மையாகக் காண்பார்போற் காண்பாரும் உளரென்றும் பொருளுரைத்தலும் ஆம்.
இத்திருவெண்பாவால் ஆசாரியர் உபதேசித்த பொருள்களை மாணாக்கர் இம்முறைமைகளாய் ஏற்றுக் கொள்வார் என்று அறிவித்தவாறு காண்க