ஒழுவிலொடுக்கம்

84. புளிசேர் பழமானாற் போற்புறம்போ டுள்ளின்

புளிசேர் பழமானாற் போற்புறம்போ டுள்ளின்
முளை தானும் வேறாய் முளைபோய்த் – துளைமாண்ட
வூசிக்குப் பாச மொழிந்தது போ லொப்பாருக்
காசைக்கே டானந்த மாம்.

(இ-ள்.) புளி சேர் பழம் ஆனால் போல் புறம்போடு உள்ளின் முளைதானும் வேறு ஆய் முளைபோய்- முன்னர்ப் பிஞ்சாய் இருந்தபோது ஒடும் வித்தும் பிரிபடாது ஒன்றாய்ச்சேர்ந்த புளி அவ்வோடும் வித்தும் பிரிபடும்பழம் ஆனாற் போல், முன்னர் அறிவு முதிராமையின் பிரிபடாதிருந்த மும்மலங்களும் இப்போது அவ்வறிவு முதிர்ந்தமையால் மாயை கன்மம் ஆகிய புறம்போடு உயிருள் இருந்த முளையாகிய ஆணவமும் தமக்கு அந்நியமாய் நீங்கி இவற்றான் ஏறுவதாய ஆகாமிய முளையும் போய்,

துளை மாண்ட ஊசிக்குப் பாசம் ஒழிந்தது போல் ஒப்பாருக்கு ஆசைக்கேடு ஆநந்தம் ஆம் – காதற்ற ஊசிக்குச்சரடு ஒழிந்தது போல் தற்போதத்தோடு எல்லாப் பாசங்களையும் இங்ஙனம் ஒழிந்தோர்க்கு அப்போதத்தால் தோற்றும் ஆசை நாசமே சிவாநந்தப்பேறாம்.

(வி-ரை.) மாயையும் கன்மமும் புறம்பாய்க் காணப்டுதலின், “புறம்பு” என்றும், அவை நீங்கிய போதும் தான் நீங்காது உயிருள் இருத்தலின், ஆணவத்தை “உள்ளின் முளை” என்றும், ஆகாமியம் பிறவிக்கு ஏது ஆகலின், இதனையும் “முளை’ என்றுங்கூறினார்.

காது அறாமுன் தொடர்ந்த பாசம் அஃது அற்ற போது ஒழிந்தாற்போல், போதம் அறாமுன் தொடர்ந்த பாசம் அஃது அற்றபோது ஒழிதலின், “ஊசிக்குப் பாச மொழிந்தாற்போ லொப்பாருக்கு” என்றார்.

தேகபோகங்களாகிய துன்பத்தை இன்பம் போல் மாறுபாடாய்த் தோற்றுவித்து உயிர்க்கு ஆசை உண்டாக்குவது ஆணவம். அதனது வாசனை போதம் ஒழியும் அளவும் இருத்தலின் அதன் காரியமாகிய ஆசைகெடவே காரணமாகிய அவ்வாணவ வாசனையும் அவ்வாசனையால் எழும் போதமும் கெடும் ஆகலின், “ஆசைக்கேடாநந்தமாம்” என்றார்.

இத்திருவெண்பாவால் பக்குவம் உடையோர்க்கே ஞானம் போதித்தால் பாசநீங்கி ஆநந்தப்பேறு உளதாம் அன்றி, மற்றையர்க்கு அங்ஙனம் உண்டாகாதென்று அறிவித்தவாறு காண்க.