பொய்போல மெய்யு மறியப் பெறாப்போக
சையோகர்க் கொன்றோடுஞ் சார்பில்லை – துய்ய
விழிக்கு ளுதித்த விரிகதிர்போற் றம்மை
யழித்ததுவே யாச்சரிய மாம்.
(இ-ள்.) பொய்போல மெய்யும் அறியப்பெறாப் போக சையோகர்க்கு ஒன்றோடும் சார்பு இல்லை – முன்னர்ப் பொய்யாகிய உடலத்தோடுங் கூடியபோது அவ்வுடலமென்றும் தாமென்றும் பிரித்தறியாது அதன் மயமாயிருந்தது போல், இப்போது மெய்ப்பொருளையும் தம்மையும் பிரிக்கப்பெறாது இம் மெய்ப்பொருள் ஆந்தத்தோடுங் கூடிக் கலந்திருந்தோர்க்கு ஒருபொருளோடும் சார்பில்லை; (அஃது எங்ஙனம் எனின்),
துய்ய விழிக்குள் உதித்த விரி கதிர்போல் தம்மை அழித்ததுவே ஆச்சரியம் ஆம் – எல்லாவற்றையும் எதிரிட்டறியும் மாசற்ற விழிக்குள்ளே முன் போல் எதிரிட ஒட்டாது உதித்த சூரியனைப்போல், ஞாதுரு ஞான ஞேயம் என்னும் முப்பொருளையும் எதிரிட்டறிந்த ஆன்மபோதத்தை அங்ஙனம் எதிரிடவொட்டாது இதனுள் சிவசூரியன் உதித்து அப்போதத்தை அழித்துத் தானாயிருந்ததுவே மிகவும் அதிசயமாம்.
(வி-ரை.) கதிர்புறம்பு உதித்தபோது கண்ட கண் உள் உதித்தபோது காண்டற்கு இடமின்மை போல், போதத்தால் புறம்புபோல் தோற்றிய ஞான சூரியன் இப்போத ஒளியைத் தன் ஒளியால் மறைத்து உயிர்க்குள் உதித்தமையான் இதற்கும் எதிரிடுதற்கு இடம் இன்றென்பதறிக.