அறிவுக் கறிவென்னு மாகமங்கள் சுத்த
வறிவென்னும் வேதத்தி னந்தம் – பிறியா
நிலைக்குச் சரியாகு நீயென்றா னானென்
றலைக்கு மரிபிரமரை.
(இ-ள்.) அறிவுக்கு அறிவு என்னும் ஆகமங்கள் வேதத்தின் அந்தம் சுத்த அறிவு என்னும் பிறியா நிலைக்குச் சரி ஆகும்- சச்சிதாநந்த சிவத்தை உயிராகிய அறிவுக்கு அறிவிக்கும் அறிவென்று கூறும் ஆகமாந்தங்கள் ; வேதாந்தங்கள் அறியும் அறிவும் அறிவிக்கும் அறிவும் சுத்த அறிவு தானே என்று கூறும்; தற்போதம் போய்ச்சிவத்தைப் பிரியாத நிலைக்கும், சீவத்துவம் போய்ப் பிரமத்தைப் பிரியாத நிலைக்கும், அவ்வாகம வேதங்கள் கூறிய வாக்கியஞ் சரியே ஆகும்;
நீ என்றால் நான் என்று அரி பிரமரை அலைக்கும் – அந்நிலை நில்லாது வாசகஞானமாக நீ அது என்றால் அது நான் என்று இங்ஙனம் விஷ்ணு பிரமாதிகளையும் அலைக்கும்.
(வி-ரை.) நீ அது என்பது ஆகமம். அது நான் என்பது வேதம்.
இத்திருவெண்பாவால் பரஞானத்தால் சிவத்தைக்கூடிப் பிரியாதிருந்தோர்க்கு வேதாகமங்கள் கூறும் ஞானம் இரண்டும் சரியென்பதும் அபரஞானிகட்குச் சரியின்றென்பதும் அறிவித்தவாறு காண்க.
இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்துத்தமரொழிவு
முற்றிற்று.