உ
திருச்சிற்றம்பலம்
மூன்றாம் அதிகாரம்
இயோகக்கழற்றி
சரியாதியில் நிற்போர்களுள் ஓரொருவர் முன்விட்ட குறையால் ஞானத்திற்குப் பக்குவராய் வருவார்கள். அவர்கட்குத் தற்போதத்தை ஒழித்து ஞானம் வருவித்தற் பொருட்டு அத்தற்போதத்தால் செய்யும் சரியாதிகளைப் போதனைகளால் நீக்க வேண்டும். ஆகலின், அவ்வதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரங்கள் வைக்கப்பட்டன. ஆயின், முறையே வைத்துக்கூறாது யோகக்கழற்றியை முதற்கண் வைத்தது என்னை எனின், யோகம் ஞானத்திற்கு அருகமாகலினும் இவ்யோகத்தினின்ற ஞானபக்குவன் அதிபக்குவனாகலினும் முதற்கண் வைக்கப்பட்டது.
இவ்வதிகாரம் யோகத்தைக் கழலப் பண்ணினமையான் இதற்கு யோகக்கழற்றி என்று பெயராயிற்று. இதன் பின்னர்க் கூறும் இரண்டதிகாரத்திற்கும் அதிகாரவரைவும் பெயரும் இம்முறையே கொள்க.
சரிதை கிரியைகளைச் சற்றாக்கிச் சாகாக்
கரும யோகத்தைக் கழற்ற – வரிதவர்க்குத்
தோன்றியது பொய்யாகக் காண்கையிலே தோன்றாத
வூன்றிய போ தங்கழலு மோ.
(இ-ள்.) சரியை கிரியைகளைச் சற்று ஆக்கிச் சாகாக் கரும யோகத்தைக் கழற்ற அரிது – சரியை கிரியைகளைச் செய்வது அற்பமெனக் கருதி உடல் நாசமாகா வகை செய்யும் யோகிகளது கிரியாயோகத்தை யாவராலும் நீக்குதற்கு; அரிது;
அவர்க்குத் தோன்றியது பொய்யாகக் காண்கையிலே தோன்றாத ஊன்றிய போதம் கழலுமோ – அக்கிரியா யோகிகளுக்கு ஆறாதாரங்களினும் ஓர் மூர்த்தியைத் தியானித்து அதனை விட்டு மற்றோர் மூர்த்தியைத் தியானிக்கும் போது முன் தியானித்தது பொய்ப்பொருளாய்ப் போகத் தமக்கு அநுபவமாகக் காணுமிடத்தும் தெரியாது அதனை மெய்ப்பொருளாய்ப் பிடித்த போதம் எங்ஙனங் கழலும் ?
இத்திருவெண்பாவால் போதம் யாதொன்றினைப் பற்றினும் விடாதென்பதும், அப்பற்றைப் பிறராலும் விடுவித்தல் அரிதென்பதும் அறிவித்தவாறு காண்க.