ஒழுவிலொடுக்கம்

100. வாலே முகமாய் வரவானை யேறினார்

வாலே முகமாய் வரவானை யேறினார்
போலேயுன் போதமோ போய்த் தீண்டுஞ் – சாலப்
பெருஞ்சிரிப்பாந் தன்னைப் பிடித்தாட்டும் பேயைத்
தெரிஞ்சிருக்கத் தேடுஞ் செயல்.

(இ-ள்.) வாலே முகமாய் வர ஆனை ஏறினான் போலே உன் போதமோ போய்த் தீண்டும் – தான் கருதிய ஊருக்குச் செல்லத் தலைப்புறத்தைப் பின்னிட்டு வாற்புற முகமாய் ஆனை யேறினானைப்போலும். நீ கருதிய சிவத்தை அடைதற்கு அருளைப் பின்னிட்டு உன் போதத்தை முன்னிட்டுச் சென்றால், உன் போதமோ அச்சிவத்தைப் போய்த் தீண்டுவது? (ஆயின், அவ்வருளைத்தான் அடைய வேண்டாவோ எனின்)

தன்னைப் பிடித்து ஆட்டும் பேயைத் தெரிஞ்சு இருக்கத் தேடும் செயல் சால பெருஞ் சிரிப்பு ஆம்- தன்னை விடாது பற்றிநின்று அதனது இச்சைப்படி ஆட்டும் பேயை எதிரிட்டு அறிந்திருக்க, அஃது எங்குளதென்று தேடும் ஒருவனது அறியாமைபோல, பெத்தமுத்திகளினும் உனது உயிரை விட்டு நீங்காதிருந்து ஊட்டி உறக்கி உபகரித்து வீட்டைக் கொடுக்கும் திருவருளை வேறுபிரித்து, இஃது எங்குளதென்று தேடுவது இத் திருவருள் ஞானம் பெற்றோர்க்கு மிகவும் நகையாம்.

(வி-ரை.) வாற்புறமுகமாய் ஏறினானை அவன் கருதிய ஊருக்கு மாறாகிய ஊரைச்சார்விக்கும், தலைப்புற முகமாய் ஏறினானை அவன் கருதிய ஊருக்கு நேரே சார் விக்கும். அதுபோல், அருளைப் பின்னிட்டுப் போதத்தை முன்னிட்டுச் சென்றானைக் கருவிகளைச் சார்விக்கும், அத்திருவருளை முன்னிட்டுப் போதத்தைப் பின்னிட்டுச் சென்றானைச் சிவத்தைச் சார்விக்கும் என்பதறிக.