ஒழுவிலொடுக்கம்

105. கூட்டிற் குரங்கைநிழற் கோரணிக்கூத் தாமனத்தை

கூட்டிற் குரங்கைநிழற் கோரணிக்கூத் தாமனத்தை
யாட்டிப் பிடித்தா ரடக்குவார் – காட்சியறச்
சும்மா விருக்கி லசையாது சுற்றுவிறி
சம்மானை பம்பரங்கா ணும்.

(இ-ள்.) கூட்டில் குரங்கை நிழல் கோரணிக்கூத்து ஆம் மனத்தை ஆட்டிப் பிடித்து ஆர் அடக்குவார் – கூட்டில் அடைத்துவைத்த குரங்கைப்போலும், நிழற்பாவைக்கோரணிக் கூத்துப்போலும், ஒருவர் பிடியாதிருக்கவும் தானே சேட்டிக்கும் மனத்தினைப் போதத்தால் பற்றிப்பிடித்து ஆட்டி யாவர் அடக்கிக்கொள்வார்?

காட்சி அற சும்மா இருக்கில் அசையாது சுற்று விறிசு அம்மானை பம்பரங்காணும் – போதம் ஒன்றையும் எதிரிட்டு நாடாது சும்மா இருப்பினும், ஒருவர் பிடித்து அசைக்காது தானே சுற்றுகின்ற விறிசுபோலும், ஒருவர் எறிந்து பிடியாது தானே சுழலும் அம்மானைப்போலும், ஒருவர் ஆட்டாது ஆடும் பம்பரம் போலும் (தானே விரைந்து எழுந்து அசைவது எனின்),

(வி-ரை.) உடம்பில் நின்று சேட்டித்தலின், “கூட்டிற் குரங்கை ” என்றும், நிழற்கோரணிக் கூத்தைக்காண்டல் மாத்திரம் அன்றிப் பிடிக்கக் கூடாதது போல் மனத்தினது போக்குவரத்து அறிவதே அன்றி அதனை அறிந்து பற்றக்கூடாமையின், ”நிழற்கோரணிக்கூத்து” என்றும், பன்முகமாய்ச் சிதறி எழலின், “விறிசு” என்றும், குதித்துக் குதித்து எழலின், “அம்மானை” என்றும், ஓர் கணத்தில் அநேகஞ் சுழலாச் சுழல்வதனால், “பம்பரம்” என்றுங் கூறினார்.

கூட்டிற் குரங்கசைவும் நிழற்கூத்தசைவும் தூலமாகலின், போதம் அசைந்தவிடத்து அதனது அசைவிற்கு உவமையும், விறிசு அம்மானை பம்பரத்தசைவும் சூக்குமம் ஆகலின், போதம் சிறிதடங்கிய இடத்து அம்மனத்தின் அசைவிற்கு உவமையுமாகக் கொள்க.

காணும் – அசை.