அறிவா யிரீர்மயக்க மாகா தசையில்
விறிசாய் விடாதோ விகற்பம் – பிறியாத்
தராசி னுனிபோற் சமாதிவரின் ஞான
விராசனுமக் கொப்பா ரெவர்.
(இ-ள்.) அறிவு ஆய் இரீர் மயக்கம் ஆகாது அசையில் விகற்பம் விறிசு ஆய்விடாதோ – கருவிகளை எல்லாம் நீங்கி நின்ற உயிரறிவை விட்டு நீங்காத அருளறிவாயிருங்கோள் அங்கனம் இருப்பீர் எனின், மயக்கம் வந்தடாது; அவ்வுயிரறிவைப் பிரியாது அவ் அறிவைத் தற்போதத்தால் எதிரிட்டுப்பார்ப்பதாய் அசையில் விகற்பஞ் சுழல் விறிசுபோலாய்ச் சுழலும்; (ஆகலின் அங்ஙனம் பார்த்து அசையாது),
பிறியாத் தராசின் நுனிபோல் சமாதிவரில் ஞான இராசன் உமக்கு ஒப்பார் எவர் – இரண்டு தட்டிலும் இட்ட பொன்னும் கல்லும் சரியான போது கீழ்நின்றமுள் ஓர் பால் சாயாது மேல் நின்ற முள்ளைப் பிரியாதிருந்த அத்தராசின் முள் நுனிபோல், மயக்கமும் விகற்பமும் அடாது அவ்வருளறிவின் நேரே உமது போதம் அசைவற்று இருக்கும் சமாதி வருமாயின், அப்போது நீர் ஞானராசன் ஆவீர். அஃதன்றி உமக்கொப்பாரும் யாவர் இவ்வுலகத்து?
(வி-ரை.) கல்போலும் கேவலம் பொன் போலும் சகலம் அக்கல் மிகுந்தபோது கல் தட்டுப் புறத்தும் பொன் மிகுந்தபோது பொன் தட்டுப் புறத்தும் சாயும் கீழ்நின்ற முள்போல் ஆன்மா. இம்முள் சாய்ந்தபோதுஞ் சாயாது அசைவற நேரே நின்றபோதும் அசைவற மேல் நின்ற முள்போல் அருள் என அறிக. மேல் நின்ற முள் போல் கீழ் நின்ற முள்ளும் அசைவற நேரே நிற்றல்போல், ஆன்மா அருளில் அசைவற நிற்க வேண்டுமாகலின், “தராசு நுனி போல்” என்றார். இங்ஙனம் நிற்கின்ற சமாதி வருதல் அரிதாகலின், ”வரின்” என்றார்.
இத்திருவெண்பாவால் கேவல சகலங்கள் தாக்காது திருவருட்கண் நிற்றற்கு உபாயங் கூறியவாறு காண்க. இங்ஙனம் கேவல சகலங்களை நீக்கித் திருவருளில் அசைவற நிற்கக் கூடாதாயினும், அந்தக்கரணங்களை அடக்குதற்கு உபாயம் மேற் கூறுகின்றார்.