ஒழுவிலொடுக்கம்

111. சுட்டுப்போ தங்கழன்ற சுத்தமரை மாத்திரையின்

சுட்டுப்போ தங்கழன்ற சுத்தமரை மாத்திரையின்
மட்டுத்தா னற்றநிட்டை வாய்க்குமாற் – கெட்டேன்
றலைச்செய்யு மாநந்தஞ் சற்றோபால் வாரி
முலைக்கண்ணிற் றோன்று முறை

(இ-ள்.) சுட்டுப்போதம் கழன்ற சுத்தம் அரைமாத்திரையில் மட்டு தான் அற்ற நிட்டை வாய்க்குமாற் கெட்டேன் தலைச்செய்யும் ஆநந்தம் சற்றோ – அரைக்கணப்போது ஆயினும் இது அது என்று சுட்டி அறியும் தற்போதம் ஒழிந்த ஓர் வரம்பின்றிய சுத்தமாகிய நிட்டை வாய்க்கும் ஆயின், கெட்டேன் ! ஆண்டுப் பிரவேசிக்கும் பேராநந்தம் அற்பமோ?

முலைக்கண்ணில் பால்வாரி தோன்றும் முறை – முலையினது சிறிய கண் துவாரத்தில் பெரிய பாற்கடல் உதயமான முறைமை போல் பரிபூரணமாய்த் தோற்றும்.

(வி-ரை.) ஈண்டுச் சுத்தம் என்றது பரையோகம். இப்பரையோகத்தில் ஆன்மபோதம் மிகவும் தேய்ந்திருத்தலின், அதனை “முலைக்கண்” என்றும், இங்ஙனம் இருந்தபோது அரைக்கணத்தில் அப்பரையோகம் நீங்கிப் பரிபூரணாநந்தம் அநுபவமாய்த் தோற்றலின், அதனை “பால் வாரி” என்றுங் கூறினார்.

தான் – ஆல் அசை.

இத்திருவெண்பாவால் கருவிகளும் போதமும் இறந்த சுத்த நிலையில் நின்றால் ஆநந்தலாபம் உண்டென்று அறிவித்தவாறு காண்க.