பழக்கங் கொடியதுபார் பாறையினுங் கோழி
கிழிக்கும் பொலியைக் கிளறும் – விழித்துங்
குருடர்க் கொளிபகையாய்க் கூசிக்கோல் போடா
ரருளைப் பகுக்குமான்மா.
(இ-ள்.) பழக்கம் கொடியது பார் பாறையினும் கோழி கிழிக்கும் பொலியைக் கிளறும் – யாவர்க்கும் பன்னாள் தொன்றுதொட்டு வரும் பழக்கம் நீக்கக்கூடாமையின் மிகவும் கொடியது, அதனை நீ பார்த்தறிதி, அஃது எங்ஙனம் எனின், பன்னாள் குப்பைசீத்த பழக்கத்தால் கோழி கற்பாறையாயினும் சீக்கும், நெற்பொலிமேல் விடுப்பினும் சீக்கும்; (அஃதன்றி),
விழித்தும் குருடர்க்கு ஒளி பகை ஆய்க் கூசிக் கோல் போடார் அருளை ஆன்மா பகுக்கும்- காசநோய் படர்ந்த குருடர் கண்ணோய் தீர்ந்து விழித்தபோதும் கதிரொளி இருட்பகை போலாய்க் கூசி முன் பிடித்த கோலைக் கைவிடார், அவர்போல் அருளை அடையா முன்னர் அது இது என்று நானாவாய்ப் பகுத்த பழக்கத்தால் இப்போது பகுத்தற்கு இடம் இன்றி எங்குந் தானாயிருந்த அவ்வருளை அடைந்தும், ஆன்மா அதனைப் பகுத்துநாடும்.
(வி-ரை.) சீக்கக்கூடாத பாறையைச் சீத்தல்போல், பகுக்கக்கூடாத அருளைப் பகுத்தலானும், கிளற வேண்டுவதின்றி நின்று தின்னாது பொலியைக் கிளறுதல்போல், பகுக்க வேண்டுவதின்றியிருந்து அருளாநந்தத்தை அநுபவியாது அவ்வருளைப் பகுத்தலானும், காசமிகுந்தபோது கூசிப்பிடித்த கோலை அக்காசம் நீங்கிக் கதிரொளி கண்டும், இவ்வொளி முன் தோன்றிய இருளாய்க்கூசிக் கைவிடார்போலும்,
முன்னர் ஆணவமறைப்பான் இது என்று பகுத்த போதத்தை இப்போது அவ்வாணவம் நீங்கி அருளொளி கண்டும், இவ்வருளொளியை முன்னர் ஆணவ இருள் போல் பாவித்து விடாராகலினும், இங்கனம் உவமை கூறினார்.
தேகாதி பிரபஞ்சங்களை யெல்லாம் திருவருள் வடிவாய்க் காண்பதே அன்றி, அவற்றை நானாவாய்ப் பகுப்பி னும் இவ்வருளைப் பகுப்பதென்பது காண்க.