ஒழுவிலொடுக்கம்

114. கட்டிய நாண் விட்டாலுங் கந்தகலாக் கன்றுகளைத்

கட்டிய நாண் விட்டாலுங் கந்தகலாக் கன்றுகளைத்
தட்டிப் புறப்படுத்துந் தன்மைபோ – லொட்டொழித்து
நின்றாற்போ னீசிவமாய் நில்லென்று நீக்கமறுத்
தொன்றாக்கி லொன்றிரண்டா கும்.

(இ-ள்.) கட்டிய நாண் விட்டாலும் கந்து அகலாக் கன்றுகளைத் தட்டிப் புறப்படுத்தும் தன்மை போல் – தறியோடுங் கட்டிய தும்பைத் தெறித்து விடுப்பினும் முன் கட்டியிருந்தது போல் கருதி, அத்தறியை விட்டு நீங்காத கன்றுகளைக் கரத்தால் தட்டி ஓட்டி வெளியில் புறப்படுத்தும் முறைமை போல,

ஒட்டு ஒழித்து நின்றாற்போல் நீ சிவம் ஆய் நில் என்று நீக்கம் அறுத்து ஒன்று ஆக்கில் ஒன்று இரண்டு ஆகும்- முன் பந்தமாயிருந்துள்ள முப்பத்தாறு கருவிகளையும் விடுத்துத் தன்னையும் திருவருளையும் அறிவித்து அவ்வருளோடும் சேர்த்து, அவ்வருள் அசைவற நின்றாற்போல் நீ உன் போதம் அசைவற்றுச் சிவமயமாய் நில்லென்று கூறிச் சிவத்தைவிடத் தானொரு முதல் என்று கருதும் துவிதபாவனையை மாற்றி அச்சிவத்தோடு ஒன்றாக்கினும், போத ஒழிவால் அதனோடு ஒன்றான ஆன்மா, போத அசைவால் இரண்டாகும் ஆகலின், அதனது போதம் இருந்தவாறு என்னை!

(வி-ரை.) தும்பதெறித்து விடுத்தபோதே தாயைச் சென்று கூடிப்பால் உண்ணும் கன்று போல் ஒட்டொழித்தபோதே தற்போதம் ஒழிந்து அருள்வழிச்சென்று சிவத்தை அடைந்து பேரின்பத்தைப் பெறும் பக்குவர் போலாகாது,

கட்டிய நாண் விட்டாலுங் கந்து அகலாது நின்ற கன்றுகளைக் கரத்தால் தட்டி வெளியில் புறப்படுத்தித் தாயோடுஞ் சேர்த்து முலையைப் பிடித்து உண்ண விடுப்பினும் அவை உண்ணாது மீளுமாறு போல், ஒட்டொழித்தலுமன்றி அருளோடுஞ் சேர்த்துத் துவிதபாவனையை மாற்றிச் சிவத்தோடு ஒன்றாக்கினும் அச்சிவத்தோடு இரண்டற் றிருந்து ஆநந்தப்பேற்றை அடையாது தற்போத அசைவால் இரண்டாகலான், இவர்க்கு அக்கன்றுகளை உவமை கூறினார்.