ஒழுவிலொடுக்கம்

118. இருட்கே வலத்தின் றெழுப்பியெ திரிட்ட

இருட்கே வலத்தின் றெழுப்பியெ திரிட்ட
மருட்கே வலசகல மாற்றித் – திரிச்சுடர்போற்
றன்னறிவு தின்னிக்குத் தானுணவாய்ப் போவதல்லா
லுன்னுதலே யோட்டுதல்கா ணும்.

(இ-ள்.) இருள் கேவலத்து இன்று எழுப்பி எதிரிட்ட மருள் கேவல சகலம் மாற்றி- கருவிகள் முப்பத்தாறும் இறந்து ஆன்மபோதமும் இறந்து அந்தகாரமாயிருந்த கேவலத்தினின்றும் இப்போது தனது அருட்சத்தியால் கருவிகளைக் கூடப்பண்ணித் தற்போதத்தை எழுப்பிச் சுருதி குருவாகிய படர்க்கை முன்னிலையாய்நின்று ஞானசமாதி கூடப் பண்ணி அத்தற்போதத்திற்கு எதிரிட்ட மருளாகிய கேவல சகலங்களைப் பூரணமாகிய தன்மையாய் நின்று மாற்றி,

திரிச்சுடர்போல் தன் அறிவு தின்னிக்குத் தான் உணவாய்ப் போவது அல்லால் உன்னுதலே ஓட்டுதல்- விளக்குத் திரிமேலேறிய சுடர் சிறுகச்சிறுகத் தின்று வந்து முடிவில் அத்திரி முழுதையும் விழுங்குதல்போல, தன்னை அருளால் அறிவித்தபோது தான் இவ்வருள் வழி வரவரச் சிறுகச் சிறுகத் தின்று முடிவில் தனது போதமெல்லாம் விழுங்கித் தானாயிருக்கும் சிவத்திற்குத் தான் புசிப்பாய்ப் போவதன்றித், தான் வேறொரு முதலாய் நின்று அச்சிவத்தை எதிரிட்டு நாடுதலே அதனை நீக்குதல்.

(வி-ரை.) கருவிகளும் போதமும் இறந்து கேவல இருளிற் கிடந்த நீ கிஞ்சிக்கியனாகலின், அவ்விருளை நீக்கிக் கருவிகளைக் கூடமாட்டாய், கருவிகள் சடமாகலின் உன்னை அவை வந்து கூடி எழுப்பமாட்டா. ஆகலின், சுதந்திரமாயுள்ள அருட்சத்தி கருவிகளைக் கூட்டி உன்னை எழுப்ப இக்கருவிகளோடுங்கூடி நீ சுகிர்தனாவை. இங்ஙனம் உனக்குப் பெத்த திசையில் சுதந்திரம் இன்மை போல் முத்தி திசையினும் இன்றாகலின், நீ உன் போதத்தால் ஒன்றையும் எதிரிடாது அசைவற நிற்றி எனின், அச்சிவம் தானே உன்னை விழுங்கிக்கொண்டு நிற்கும் என்று அறிவிக்க வேண்டி, “இருட்கேவலத்தின் றெழுப்பி” என்றும், “தன்னறிவு தின்னி” என்றுங் கூறினார்.

”இன்றெழுப்பி ” என்றதனால் அநாதியில் எழுப்பியதும் இவ்வாறெனக் கொள்க. காணும்-அசை.

இத்திருவெண்பாவால் சுட்டற்றிருந்தாலன்றிச் சிவத்தைப் பெறக்கூடாது என்பதும், அங்ஙனம்நிற்பின் சிவம் தானே விழுங்கிக்கொள்ளும் என்பதும், அறிவித்தவாறு காண்க.

ஆயின் நீர் இங்ஙனங் கூறியவாற்றான் வேதாந்தி நிலையே நன்று என்ற மாணாக்கனை நோக்கி மேற் கூறு கின்றார்.