ஒழுவிலொடுக்கம்

119. அறிந்ததெல்லாம் பொய்யென்ற வத்துவி தியார்க்கும்

அறிந்ததெல்லாம் பொய்யென்ற வத்துவி தியார்க்கும்
வெறும்பாழி லூன்றல் விடாது – பிறந்திறப்பை
யானா லுனதொழிவு மாநந்த மாமுதிப்பும்
போனாற்கா ணுன் பிறப்பும் போம்.

(இ-ள்.) அறிந்தது எல்லாம் பொய் என்ற அத்துவிதியார்க்கும் வெறும்பாழில் ஊன்றல் விடாது பிறந்து இறப்பை ஆனால் – கண்ணினால் அறிந்த காட்சி எல்லாம் கண்ணாகாத வாறும் போல், எம்மால் எதிரிட்டு அறிந்தவெல்லாம் யாம் அல்லோம், இவை மித்தியாரூபம் என்று அவற்றைநீக்கி நின்ற வேதாந்தியாருக்கும், அங்ஙனம் எதிரீடாய்த்தோற்றுவனயாவும் இன்றிச் சர்வசூனியமாயிருந்த பிரமம் நாம் என்று இச்சூனியத்தில் தற்போதம் ஊன்றி நிற்றல் விடாது , ஆகலினால், நீ அவர்போல் நிற்றியாயினும், சனன மரணப்படுவை; இங்ஙனம் நிற்பினும் உற்பத்தி நாசம் உளவென்றீர், இனி உற்பத்தி நாசம் இன்றாய முத்தியாது எனின்,

உனது ஒழிவும் ஆநந்தம் ஆம் உதிப்பும் போனால் உன் பிறப்பும் போம் – உனது போதொழிவாகிய பரையோகமும் இப்பரையோகத்தில் மேலிடும் ஆநந்தோதயமும் போனால் அப்போது உன் பிறப்பும் போம்.

(வி-ரை.) பரையோகமும் ஆநந்தப்பேறும் ஆன்மாவிற்கு அநுபவமாய்த் தோற்றலானும், அவ்விடங்களில் ஆன்மாவிற்குச் சிவத்தோடு அத்துவிதம் இன்றாகலானும், ”போனாற்காணுன் பிறப்பும் போம்” என்றார். அவை போனவிடஞ் சுகாதீதம்.

காண் – அசை.

இத்திருவெண்பாவால் வேதாந்தியர் இங்ஙனம் நிற்றலின் அவர்க்கும் பிறப்பு நீங்காதென்பதும், பிறப்பும் இறப்பும் நீங்கும் இடம் இவ்விடம் என்பதும், அறிவித்தவாறு காண்க.