நீர்க்கும் வழிக்குந் துயரில்லை நீந்தி நடந்
தார்க்குத் துயரென் றறிவறியா- மூர்க்கருரை
யாற்றுக்கு வாய் கட்டி யம்பரத்துக் கேணியிட்டுக்
காற்றுக்குக் கால் பிடித்தல் காண்.
(இ-ள்) நீர்க்கும் வழிக்குந்துயர் இல்லை நீந்தி நடந்தார்க்குத் துயர் என்று அறிவு அறியா மூர்க்கர் உரை- வெள்ளமாய் நிறைந்துள்ள நீருக்கும் ஒரூர்க்குச் செல்லும் வழிக்கும் துன்பம் ஏதும் இல்லை, அவ் வெள்ளத்தை நீந்திச் செல்வோர்க்கும், அவ்வழி நடந்து செல்வோர்க்கும் துன்பமென்று அறிவது போல, பூரணமாய் மௌனமாய் ஆநந்தமாயிருந்த சிவத்திற்கு ஓர் துன்பமும் இன்று, அதற்கு ஓர் துன்பமும் உளது போற்கருதி, பூசை நைவேத்திய உபசாரங்களைச் செய்யத்தொடங்கும் எமக்கே துன்பமென்று அறிந்து, இங்கனம் செய்யும் பூசையாதிகளை விட்டு நீங்கி, அச்சிவத்தை அறிவித்தற்கு ஏதுவாய ஞானாசாரியரை அடைந்து, திருவருள் ஞானத்தை அறியாத கிரியாகுருவாகிய துற்சனர் பிறர்க்கு உபதேசம் போற் கூறும் உரை,
யாற்றுக்கு வாய் கட்டி அம்பரத்துக்கு ஏணி இட்டுக் காற்றுக்குக் கால் பிடித்தல் – பிரளயமாய்ச் செல்லும் ஆற்றுக்கு வாய்கட்டி அதனை அடக்கச் செல்லுதல்போலும், ஆகாயத்தின் கண் ஏணி நாட்டி இதன் மேல் ஏறி அதனைப் பிடிக்கச் செல்லுதல்போலும், காற்றுக்குக் கால்பிடித்தல் முதலிய உபசாரங்களைச் செய்யச் சொல்லுதல் போலும்
(வி-ரை.) மலைக்கண் நின்று கடலளவும் ஊடுருவிக் கோத்து நின்ற ஆற்றுக்கு வாய்கட்டி அடக்கச் சொன்னது போல், பிருதிவி முதல் முப்பத்தாறு கருவிகளையும் ஊடுருவிப் பேராநந்தக்கடலாய் நிறைந்திருந்த சிவத்தை ஓர் வடிவத்து ஆவாகனம் பண்ணச் சொல்வதனால், “ஆற்றுக்கு வாய்கட்டி” என்றும், ஏணிநிற்றற்கும் அதன் மேல் ஏறிச் செல்வோனுக்கும் இடங்கொடுத்து நின்ற ஆகாயத்தை அவ்வேணிமேல் ஏறிப்பிடிக்கச் சொன்னது போல், அந்தரியாக பூசைக்குத் தான் சொல்லுந் தானத்திற்கும் அத்தானத் திருந்து பூசனை செய்வோனுக்கும் உட்புறம்பாய் நிறைந்துள்ள சிவத்தை இங்ஙனம் இருப்பதென்று அறியாது, அப்பூசனையால் அறி என்று சொல்வதனால், “அம்பரத்துக்கேணியிட்டு’ என்றும், அருவமாயிருந்த காற்றிற்குக்காலே இன்று, அஃது அங்ஙனம் இருப்பவும் அதற்குக் கால்பிடித்தல் முதலிய உபசாரங்களைச் செய்யச் சொல்வது போல், உருவம் அருவம் உருவருவங்களை எல்லாம் கடந்து நின்ற சிவத்திற்கு வடிவேயில்லை. இஃது இங்ஙனம் இருப்பவும் இதற்குச் சோடச உபசாரங்களைச் செய்யச் சொல்வதனால், “காற்றுக்குக் கால்பிடித்தல்’ என்றுங் கூறினார். உபசாரஞ் செய்தலை இருவகைப் பூசைக்கும் பொதுவாகக் கொள்க.
காண் – அசை.
இத்திருவெண்பாவால் கிரியாகுரு உபதேசத்தால் ஆன்மலாபம் இன்றென்று அறிவித்தவாறு காண்க.
ஆயின் ஞானிக்குக் கிரியை செய்யவேண்டாவோ எனின், மேற் கூறுகின்றார்.