வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட
புதுமைச் சிவாநந்தம் போதும் – பதையா
விளக்கொளியி லெண்ணெய் வியாபியா னாற்போற்
கொளக்கொடுத்தல் சத்தியமாக் கொள்.
(இ-ள்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக்கொண்ட புதுமைச் சிவாநந்தம் போதும் – தன் புருடனைக்கூட இன்புறுதற்கு ஏதுவாகச் செய்யும் கலியாணச் சடங்கினை அவனோடும் கூடி இன்புறுதலாகக் கருதிக்கொண்ட பேதைப் பெண்போல், சிவனாகிய புருடனை ஆன்மநாயகி கூடி இன்புறுதற்கு ஏதுவாகச் செய்யும் கிரியைத் தொழிலை அவனோடும் கூடி நீ இன்புறுதலாகக் கருதிக்கொண்ட இந்தப் புதுமையாகிய சிவாநந்தம் அமையும் (இனிக் கிரியைச் சிவாநந்தமாகக் கருதும் கருத்தை விட்டு),
பதையா விளக்கு ஒளியில் எண்ணெய் வியாபி ஆனால் போல் கொளக்கொடுத்தல் சத்தியமாக் கொள்– அசையாது நின்று விளக்கொளிக்குள் எண்ணெய் வியாபியானாற் போல், நீ சிவத்தில் வியாபியாய் அசைவற நின்று அது விழுங்கிக்கொள்ள உன்னைக் கொடுத்தல் உண்மையாயுள்ள முத்தி என்று அறிந்து கொள்ளுதி.
(வி-ரை.) விளக்கொளியில் எண்ணெய் வியாபித்துக் கொண்டு நிற்க, இவ்எண்ணெய்யை அவ்வொளி விழுங்கித்தான் பிரகாசித்தல்போல், அச் சிவபூரணத்தில் ஆன்மா வியாபித்து அசைவற நிற்கவே, அச்சிவபூரணம் இவ்வான்மாவை விழுங்கிக்கொண்டு தான் பிரகாசிக்கும் ஆகலின், “விளக்கொளியி லெண்ணெய் வியாபியானாற்போற் கொளக்கொடுத்தல்” என்றார்.
தன்னைக் கொடுப்பது சத்தியம் எனவே தன்னாற் செய்யும் கிரியை அசத்தியம் என்பது தானே ஆயிற்று.
இத்திருவெண்பாவால் போதத்தாற் செய்யும் கிரியை முத்திக்கு ஏது அன்று என்பதும், போதத்தைச் சிவனுக்கு ஊணாகக்கொடுத்து நிற்றலே ஏது என்பதும் அறிவித்தவாறு காண்க.
நான்காம் அதிகாரம் –கிரியைக்கழற்றி முற்றிற்று.