குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ
கருப்பிரத மோத்தையோ காட்டு – மருட்டரித்த
வாசானைப் போல்வரோ வாறாறுக் கப்புறத்தே
பேசா திருத்தவல்லாப் பேர்.
(இ-ள்.) குருட்டு அரிப்பனார்க்கும் குபேரன் என்று பேரோ கருப்பிரதம் மோத்தையோ காட்டும்- பிறவி அந்தகனாகிய அரிப்பாளனுக்கும் குபேரனென்று பெயருண்டு கொலோ? கரும்பினது இரசத்தை மோத்தை ஆடு அறிந்து கூறுமோ? அவைபோலும்.
ஆறாறுக்கு அப்புறத்தே பேசாது இருத்த அல்லாப் பேர் அருள் தரித்த ஆசானைப் போல்வரோ- அருள் வடிவம் அல்லாத மாயா வடிவங்கொண்ட அநாசாரியரானார் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்ற சிவத்தோடு மாணாக்கனை இரண்டறக் கலப்பித்து மௌனமாய் வைக்க அருளே திருமேனியாகக்கொண்டெழுந்தருளி வந்த ஞானாசாரியரைப்போலும் ஆவாரோ?
(வி-ரை.) குருட்டரிப்பனுக்குக் கைப்பரிசமே அன்றிக் கட்பார்வை இன்மையால் பொற்பொடியே தோன்றாது, அங்ஙனம் இருப்ப அவனையும் செல்வத்தால் அளகேசன் என்று கூறக்கூடுமோ?
அது போல அநாசாரியருக்குக் கிரியைத்தொழிலன்றி ஞானமேயில்லை. அங்ஙனம் இருப்ப அவரையுங் குரு என்று கூறப்படுமோ? என்றும், மோத்தையாடு “கொழுந்தாடை” தின்பதே அன்றிக் கரும்பு தின்ன அறியாதாதலின், அதனது இரசத்தை அறிந்து இங்ஙனமென்று தனது குட்டிக்குக்காட்ட அறியுமோ? அதுபோல அநாசாரியர் ஆகமங்கள் கூறும் மந்திரகலை, தந்திரகலை உபதேசகலைகளுள், உபதேசகலையை விட்டு இரு வகைக்கலைகளை ஆராய்ந்து அவற்றுள் கூறிய சரியையாதி களைச்செய்து அவற்றான் வரும் விடயாநந்தானுபவம் பெறுவதே அன்றிச் சிவாநந்தானுபவம் அணுவளவேனும் அறியார், அங்ஙனம் இருப்பப் பிறர்க்கு அச்சிவாநந்தானுபவம் எங்ஙனங் கூறுவார்? என்றும், இந்த உவமைகளால் அறிவித்தவாறு காண்க.
அஃதன்றியும், ஆடோகாட்டும் என்னும் எதிர்மறை ஓகாரம் அவ்வாட்டை மறுத்து யானையைக் காட்டி நின்றதாகலின், கருப்பந் தோட்டத்தைப் போல் சிவாகமம், அதனுட்புகுதும் ஆடு யானை போல் இதனுட்புகுதும் கிரியா குரு ஞானகுரு .
ஆடு கரும்பை விட்டு இலையைத் தின்று அதனது சுவையைத் தானும் அறிந்து தனது குட்டிக்குங் காட்டுதல்போலவும், யானை இலையைவிட்டுக் கரும்பைத் தின்று அதனது சுவையைத் தானும் அறிந்து தனது கன்றுக்குங் காட்டுதல் போலவும், கிரியா குரு மந்திர தந்திரகலைகளை ஆராய்ந்து அவற்றுள் கூறிய சரியையாதிகளை அநுஷ்டித்து அவற்றான் வரும் விடயாநந்தத்தை தானுமனுபவித்துத் தன்னை அடைந்த சீடனுக்கும் அவ்வுபதேசங்களால் அவ்வாநந்தத்தை வருவிப்பனென்பதும், ஞான குரு மந்திர தந்திர கலைகளைவிட்டு உபதேசகலையை ஆராய்ந்து அதனுள் கூறிய ஞாநாநந்தத்தைத் தானும் பெற்றுத் தன்னை அடைந்த பக்குவனுக்கும் அந்த ஞாநாநந்தத்தை வருவிப்ப னென்பதுங் காண்க.
”புறம்பு காண்குவன் புல்லிய னீசனை
அறிந்த ஞானி யகமுறக் காண்பனால்
எறும்பி காண்குறி லின்கரும் பேகொளும்
செறிந்த வாடிலை தின்பன வென்பவே.”
என்பது பிரபுலிங்கலீலை. அஜகஜாந்தரம் என்னுங்கிறந்த சமாதியும் அது.
குருட்டரிப்பனென்பதை “குருட்டரிப்பனார்” என்று இழிபின்கண் பன்மையாகக் கூறினார். கண்பார்வை இன்மை போல் ஞானமின்மை, கைப்பரிசம் அறிதல் போல் கிரியைகளைச் செய்தல் என்பதுங்காண்க.
இத்திருவெண்பாவால் அநாசாரியர் இலக்கணமும் ஆசாரியர் இலக்கணமுங் கூறியவாறு காண்க.