உடலா லுழைத்தா லுடலொழியு மென்று
கெடுவீரிதையெங்கே கேட்டீர் – உடலே
நடையா டியபிணம்போ னான் போய்த்திரியக்
கிடையாதோ வென்றுகேளீர்.
(இ-ள்.) உடலே நடை ஆடிய பிணம் போல் நான் போய்த் திரியக் கிடையாதோ என்று கேளீர் – இந்த உடல் தானே நடையாடிய பிணம்போலத் தற்போதம் கெட்டு நிலத்தின்கண் உலாவ எமக்கு உண்டாகாதோ? என்று ஞானாசாரியரைக் கேளாத நீங்கள், கெடுவீர்
உடலால் உழைத்தால் உடல் ஒழியும் என்று இதை எங்கே கேட்டீர்- கெடுவீர்காள், உடலால் வருந்தி யாத்திரை சேறல் முதலிய இச்சரியைத் தொழிலைச் செய்தால் பிறப்பு நீங்கும் என்று இந்த உபதேசத்தை எந்தக் குருவினிடத்துக் கேட்டீர்?
(வி-ரை.) ஞானாசாரியரை அடைந்து அநுக்கிரகம் பெற்ற மெய்ஞ்ஞானிகட்குக் கருவிகள் முப்பத்தாறும் தற்போதமும் கெடலான், அக்கருவிச் சேட்டையும் போதச் சேட்டையும் இன்றாம்; ஆகலின், அவரது திருமேனி உள்ளும் புறனும் வெறுங்கடத்து ஆகாயம் போல் சிவமே நிறைந்திருக்கும்; அவர் நிலத்தில் சரிக்கும்போதும் அக்கடம் ஆகாயத்திற் செல்வதுபோல் தோற்றும்; ஆகலின், “நடையாடிய பிணம் போனான் போய்த்திரிய” என்றார்.
கேளீர் எங்கே கேட்டீர் என முடிக்க. வீடடையத் தொடங்கி இங்ஙனம் செய்தலால், “கெடுவீர்” என்றார்.
இத்திருவெண்பாவால் அவர் கேட்ட உபதேசத்தை மறுத்தவாறு காண்க.