ஒழுவிலொடுக்கம்

140. எந்தவூர் நீரென்றா லிப்போ திருந்து நாம்

எந்தவூர் நீரென்றா லிப்போ திருந்து நாம்
வந்தவூர் தன்னை மறந்தோமே – லந்தவூர்க்
கின்று நாம் போம்வழியே தென்னினுமக் கேழுலகு
மொன்று போலொன்று தோன்றும்.

(இ-ள்.) எந்த ஊர் நீர் என்றால் இப்போது இருந்து நாம் வந்த ஊர் தன்னை மறந்தோமேல்-யாம் இந்த ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் சென்றபோது, அவ்வூரில் இருந்தான் ஒருவன் எந்த ஊர் நீர் என்று எம்மைக் கேட்டால், இப்போது இருந்து வந்த ஊர் தன்னை அவனுக்கு இன்ன ஊர் என்று சொல்ல மறந்தோம் எனின்,

அந்த ஊர்க்கு இன்று நாம் போம் வழி ஏ  து என்னின் உமக்கு ஏழுலகும் ஒன்று போல் ஒன்று தோன்றும்- முன்னிருந்து வந்த ஊருக்கு இப்போது நாம் போவதற்கு வழியாதென்று நீர் நாடின், உமக்கு எழுலகும் ஒன்று போல் தோன்றி அந்த ஊருக்குச் செல்லும் வழிபோல் மற்றோர் ஊருக்குச் செல்லும் வழி தோன்றும் (எனின், இங்ஙனம் கேட்டோனுக்கு ஊர்ப்பெயரும் சொல்ல மறந்து அவ்வூருக்குச் செல்லும் வழியும் தெரியாது மயங்கிய இப்போதம் கொண்டோ திரிகரணங்களையும் கடந்து நின்ற பூரணசிவத்தை நீர் அடையத் தொடங்கினீர்?)

(வி-ரை) அவர்க்குத் தம்மைப்போல் இவரும் தோற்றலான், அவரை இவர் தம்மோடுங் கூட்டி “மறந்தோ மேல் ” என்றார். ஊர்ப்பெயர் சொல்ல மறந்து போவது தூலபுத்தியால் தெரியாது யாம் அங்ஙனம் மறப்பது இலம் என்று அவரைத் தம்மைவிடப் பிரித்து நோக்கி, உமக்கு ஏழுலகும் ஒன்று போல் ஒன்று தோன்றும் எனத்தூலமாகிய வழித் திகைப்பை எடுத்துக் காட்டினார்.

நெறிக்கண் திசைதப்பியபோது முன்போல் நான்கு திசையும் பிரிந்து தோன்றாது ஆகலின், ”ஏழுலகு மொன்று போல்” என்றார்.

இத்திருவெண்பாவால் ஞானாசாரியரால் அன்றி ஆன்மாக்கள் சுதந்திரத்தால் வீடடையக் கூடாதென்று சுதந்திரகீனமறிவித்தவாறு காண்க.