ஒழுவிலொடுக்கம்

7. பொய்போகப் போகப் பொருந்திப் பொருடானாஞ்

பொய்போகப் போகப் பொருந்திப் பொருடானாஞ்
சையோக போக தரங்கத்தினையும்
பரிபாகங் கண்டு பதையாமற் பார்க்கும்
குருவேகாண் ஞானக் குரு.

(இ-ள்.) பொய்போகப் போகப்பொருந்தி – பொய்யாகிய கருவிகள் முப்பத்தாறும் நீங்க நீங்கவே அவைகளைப்பகுத்தறிந்து நீங்கி நின்ற அறிவு தானென்று தன்னை அருளால் உள்ளபடி கண்டு, பின்பு அருள் தரிசனம், பரைதரிசனம், பரையோகம் என்னும் இவற்றை அடைந்து

பொருள் தான் ஆம் சையோக போக தரங்கத்தில் நையும் பரிபாகம் கண்டு பதையாமல் பார்க்கும் குருவே ஞானக் குரு- மெய்ப்பொருள் தானாகிய அநுபவசத்தியில் தோன்றும் ஆநந்தபோக சமுத்திரத்து அலையில் அவன் கரைந்து போகும் தீவிரதர பக்குவம் ஈதென்று கண்டு மாணாக்கனது போதம் அணுவளவேனும் பதையாது அடங்கக் கிருபாநோக்கம் வைக்கும் ஆசாரியனே ஞானாசாரியனாவான்.

(வி-ரை.) சீவகரணம் பரையோகமளவுந் தொடர்தலின், “பொய்போகப்போக” என்றார். “சையோகம்” என்றது அனுபவசத்தி. அது பரையோகத்திற்கும் சுகாதீதத்திற்கும் இடையே தோன்றும் ஆநந்தப்பேற்றிற்கிடம் ”போக தரங்கத்து’ என்றமையால் சமுத்திரம் வருவிக்கப்பட்டது. தரங்கம் ஆநந்தமேலிடல், அவ்விடத்து ஆன்மபோதங் கெடுமாகலின், “நையும்” என்றார்.

அடிதொடங்கி அநுபவமுற்றுங் கூறினமையால் இவ்வநுபவமுற்றும் பெறுமவன் அதிதீவிர பக்குவன் என்பது காண்க.

காண் – அசை.

இத்திருவெண்பாவால் ஞானாசாரியராயினும் பக்குவரை அறிந்து போதியாராயின் அவரையும் ஆசாரியரலர் என்று கூறியவாறு காண்க.