விடய முதித்து நின்று விட்டவிடங் கீழ்மே
லிடைவிடா தேநிறைந்த வின்பந்-தொடுவரோ
தோன்றி யழிவதுவே துக்கசுக முன்னுண்மை
தோன்றா வடங்காச் சுகம்.
(இ-ள்.) விடயம் உதித்து நின்று விட்ட இடம் கீழ் மேல் இடைவிடாதே நிறைந்த இன்பம் தொடுவரோ- ஓர்விடயத்தின் கண் தோன்றிநின்று அழியப்பட்ட இன்பம் கீழாய இன்பம், வெவ்வேறு வகைப்பட்ட பொருள்களினும் இடையறாது பரிபூரணமாய் நிறைந்த இன்பம் மேலாய இன்பம் ; ஆகலின், இவ்வின்பத்தைப் பெற்றுள்ளார் தற்போதத்தால் அதனைப் பற்றுவரோ? (அஃது எங்ஙனம் எனின்),
தோன்றி அழிவதுவே துக்கசுகம் உன் உண்மை தோன்றா அடங்காச் சுகம் – போதத்தால் பற்றி அறிந்து அனுபவிக்கும் அவ்வின்பம் தோன்றி அழிவது; அங்ஙனம் தோன்றி அழிவதுவே சுகமும் துக்கமும் ஆகலினும், உன துள்ளே மெய்ம்மையாயிருந்த இன்பம் ஓர் காலங்களினும் உற்பத்தி நாசம் இன்றாம் வீட்டின்பம் ஆகலினும்
(வி-ரை.) அவ்வின்பம் ஓர் விடயத்தில் தோன்றி அழிதலால் பற்றி விடப்பட்டது. இவ்வின்பம் பூரணம் ஆகலானும் உற்பத்தி நாசம் இன்மையானும் பற்றுதல் விடுதல் இதற்கு இன்மை ஆயிற்று.
தோன்றியபோது சுகமும் மறைந்தபோது துக்கமும் வருதலின், ”தோன்றியழிவதுவே துக்கசுகம் என்றார். இச்சுகதுக்கங்களால் விழைவு வெகுளியும், இவ்விழைவு வெகுளிகளால் இருவினைகளும் இவ்விருவினைகளால் பிறப்பும் உண்டாம் என்பதுங் கொள்க.
அவ்வின்பம் பற்றிய போது தோன்றும் விடுத்த போது மறையும், இவ்வின்பம் பற்றிய போது மறையும், விடுத்தபோது தோன்றும் என்பதுங் காண்க. (அவ்வின்பம்-விடயவின்பம்; இவ்வின்பம் – வீட்டின்பம்.)
இத்திருவெண்பாவால் இவ்வின்பம் போல் அவ்வின்பம் போதத்தால் அறியக் கூடாதென்று அறிவித்தவாறு காண்க.
ஆயின் அவ்வின்பம் இத்தலத்தில் தோன்றுவதில்லை ஆகலின், மற்றோர் தலத்தில் சென்றிருந்து தவத்தைப் பண்ணி அதனைப் பெறுகின்றேன் என்ற மாணாக்கனை நோக்கி மேற் கூறுகின்றார்.