எங்கும் பரிபூ ரணமென்னி னீதல்ல
வங்கங்கா மென்னும்போ தங்கிலையோ – பங்காகேள்
ஆகாயந் தீண்டிவிடு மற்ப வறிவழிவி
லேகாண்பே ரின்பமுதிக்கும்.
(இ-ள்.) எங்கும் பரிபூரணம் என்னில் ஈது அல்லது அங்கு அங்கு ஆம் என்னும் போது அங்கு இலையோ பங்காகேள் – அப்பேரின்பம் இருநூற்றிருபத்துநாலு புவனம் எங்கும் உட்புறனாய் நிறைந்துள்ள பரிபூரணமென்று வேதாகமங்கள் கூறும் எனின், அவ்வின்பம் பெறுதற்கு ஏது இத்தலம் அன்று காசி முதலிய அந்தந்தத்தலங்களில் பெறலாம் என்று நீ கூறும்பொழுது, நீ இருந்த அத்தலத்தில் அவ்வின்பம் இன்றாயதோ? பகுப்பறிவு நீங்காதவனே! கேட்டி,
ஆகாயம் தீண்டி விடும் அற்ப அறிவு அழிவிலே காண் பேரின்பம் உதிக்கும் – பரையோகமாகிய ஞானாகாசத்தைப் பெற்றவிடத்து அதற்குமேல் தோன்றும் அநுபவத்தை நாடித்தான் நின்ற நிலையைத் தழுவும் அற்பவறிவு அழிந்தவிடத்திலே உனக்குப் பேரின்பம் தோன்று மென்று அறிதி.
(வி-ரை.) பரையோக நிட்டை பெற்ற காலை அதற்கு மேல் தோன்றும் சிவத்தை நாடாது அவ்வருளையும் மறவாதிருப்பின், சிவதரிசனம் தானே தோன்றும், அது தோன்றவே கிஞ்சிக்கிய போதம் அழியும், அஃதழியவே பேரின்பம் தோன்றும் ஆகலின், “ஆகாயந் தீண்டிவிடு மற்பவறி வழிவிலே காண் பேரின்ப முதிக்கும்” என்றார்.
“கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில் பிரியாத சிவன்றானே பிரிந்து தோன்றி
பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி நெறியாலே யிவையெல்லா மல்ல வாகி
நின்றென்றும் தோன்றிடுவனிராதார னாயே” என்பது சித்தியார்.
“இரைதேர் கொக்கொத் திரவுபக
லேசற் றிருந்தே வேசற்றேன் கரைசே ரடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் னடியேன்பால் பிரைசேர் பாலி னெய்போலப்
பேசா திருந்தா லேசாரோ” என்பது திருவாசகம்.
இத்திருவெண்பாவால் பூரண இன்பம் உறுதற்குத் தலம் இடம் அன்றென்றும் போதநாசம் இடமென்றும் அறிவித்தவாறு காண்க.
அப்பேரின்பம் அடைதற்கு இச்சிற்றின்பமாகிய விடயம் தடை ஆதலின், இதனை ஒழித்து அதனை அடைவேன் என்ற மாணாக்கனை நோக்கி மேற்கூறுகின்றார்.