ஒழுவிலொடுக்கம்

153. அறுசமயத் தோர்க்கு மறுதியிட்ட கூடற்

அறுசமயத் தோர்க்கு மறுதியிட்ட கூடற்
துறவா யவாவறுத்த தூய்மை – பிறவா
முடிகளச முத்தி முயற்சியெல்லா மூத்த
கடைகரும நாசமிது காண்.

(இ-ள்.) அறு சமயத்தோர்க்கு அறுதி இட்ட கூடல் துறவு ஆய் அவாஅறுத்தல் தூய்மை – அறுவகைச்சமயத் தோர்க்கும் வீடடைதற்கு மட்டிட்டு வைத்த பொதுநெறி யாதெனின், கூடற்கண் சங்கப்பலகையில் ஏறி இருந்து உட்பற்றுப் புறப்பற்று என்னும் இருவகைப் பற்றினையும் துறப்பதாய் இத்துறவுகளான் மெய்ப்பொருளை உணர்வதாய்ப்பிராரத்த வாசனையான் ஓரோர் காலையின் உள்ளத்தெழும் அவாவினையும் அறுத்தல் தூய்மையாய்க் கூறிய இம்மூவகை அதிகாரங்களின் நெறிகளேயாம்; (),

பிறவா முடிகளச முத்தி முயற்சி எல்லாம் மூத்த கடை கரும நாசம் இது காண் – அஃது அன்றியும் பிறவாமைக்கு ஏது கூறிய பலவாற்றுள்ளும், சிரசாய கருவிகள் முப்பத்தாறையும் போக்கப்பட்ட வீடும், தற்போத முயற்சி எல்லாம் முதிர்ந்தகடையாகிய கரும நாசமும், இம் மூவகை அதிகாரத்திற் கூறிய நெறியாம்.

(வி-ரை.) சமயிகள் அறுவரும் வீடடைதற்கு மட்டு வேறு வேறு கூறினார் ஆயினும், ஒருவர் கூறியது ஒருவர்க்குச் சம்மதம் அன்று, துறவாய் மெய்யுணர்ந்து அவாவறுத்தல் அனைவர்க்கும் சம்மதமாம்; ஆகலின், ” அறுசமயத்தோர்க்கு மறுதியிட்ட கூடற்றுறவா யவாவறுத்தல்’ என்றார்.

துறவும் அவாவறுத்தலும் கூறினமையான், இடையில் மெய்யுணர்வு வருவிக்கப்பட்டது.

இங்ஙனம் சங்கப்பலகையின் மேல் ஏறிக் கூறிய மூன்றதிகாரங்கள் என்றது திருக்குறளுள் துறவாதி மூன்றதிகாரங்களையுமாம் என்றறிக.

இம்மூவகை அதிகாரங்களின் நெறிகளில் ஒழுகுதல் உயிர்ச்சுத்தி; இங்ஙனம் உயிர்ச்சுத்தி பண்ணுவோருக்கு உடற்சுத்திபண்ணவேண்டுவது இன்மையால், “கடைகரும நாசமிதுகாண்” என்றார்.

காண் – அசை.

இத் திருவெண்பாவால் உட்டுறவு புறத்துறவு உடையாரைச் சமயிகள் எல்லாரும் ஞானிகளென்று அங்கீகரிப்பரென்று அறிவித்தவாறு காண்க.