ஒழுவிலொடுக்கம்

154. வாசிக்குச் சாவீரர் வைதாற் பொறாதது போ

வாசிக்குச் சாவீரர் வைதாற் பொறாதது போ
லாசைக்கே டர்க்கிதுவா மட்டதென – நேசித்த
வொட்டையைப் போல் வார்க்கா முடம்பார வூண்பழகும்
பெட்டருக்கீ தாகாப் பிழை.

(இ-ள்.) வாசிக்குச் சாவீரர் வைதால் பொறாதது போல் ஆசைக் கேடர்க்கு இது ஆம்- வாசி என்ற வார்த்தைக்கு மனம் பொறாது இறந்துவிடத்துணிந்த வீரரை வைதால் மனம் பொறாதது போல், பெண்ணாசை ஆகாதென்று ஓர் வார்த்தை கூறிய மாத்திரத்தில் அவ்வாசை மனத்தின்கண் மீட்டும் எழாது அடக்கும் அவ்வாசை நாசர்க்கே இவ்வதிகாரத்தின் அருத்தம் சம்மதமாம், (அஃதன்றி)

அட்டது என நேசித்த ஒட்டையைப் போல்வார்க்கு ஆம் உடம்பு ஆர ஊண் பழகும் பெட்டருக்கு ஈது ஆகாப் பிழை- அறுசுவை அடிசில்போல் வேப்பந்தழையாதி கைப்பினை இச்சித்த ஒட்டகத்தைப்போல், காடி கூழ் களி முதலியவற்றைச் சுவையாய் விரும்புவோர்க்கும் சம்மதமாம்; உடல் பருக்கும்படி அறுசுவை அடிசில்களை நன்று தீதென்று பகுத்து ஊண் பழகும் பேடிகளுக்கும் காமிகளுக்கும் இதன் அருத்தம் சம்மதம் ஆகாத குற்றமாம்,

(வி-ரை.) மற்ற நூலின்கண் ஓரிடத்துப் பெண்ணாசை ஆகாதென்று கூறக்கண்டு அதனை விடுத்தோர்க்கே, அவ்வாசை உடையோரை மிகவும் இகழ்ந்து கூறும் இதன் அருத்தம் சம்மதமாம் ஆகலின், “வாசிக்குச் சாவீரர்வைதாற் பொறாததுபோ லாசைக்கேடர்க் கிதுவாம்” என்றார்.

அருந்தல் ஆசை வைத்துக் கூறினமையால், “ஆசைக் கேடர்க்” கென்றதை பொருந்தல் ஆசையாகக் கொள்க.

இத்திருவெண்பாவால் அருந்தல் பொருந்தல்களில் ஆசையற்றோர்க்கே இந்நூல் ஆமென்று அறிவித்தவாறு காண்க.

நீர் இங்ஙனம் கூறிய ஆற்றான் ஆசையறுதலோ முத்தி எனின், மேற் கூறுகின்றார்.