அறிந்து பற்றி நின் றழுந்து மற்ப வறிவை
அறிந்து சுத்தி யேபேரறிவாய் – நிறைந்து சிவந்
தோயாம னின்றது போற் றோற்றமுதலைந்துடனுந்
தோயாமற் சுத்தத் துறவு.
அறிந்து பற்றி நின்று அழுந்தும் அற்ப அறிவை அறிந்து சுத்தியே பேர் அறிவு ஆய்-பஞ்ச விடயங்களையும் ஞானேந்திரியங்களால் அறிந்து, கன்மேந்திரியங்களாற் பற்றி, அந்தக்கரணங்களால் அவற்றுள் அழுந்தும் கிஞ்சிக்கிய போதத்தை (ஆன்மாவினது இயற்கைக்குணம் அன்றென்றும், மதுபானங் கொண்டோனுக்கு லகிரி தோன்றியது போல் அவ்விருவகை இந்திரியங்களையும் கரணங்களையும் கூடியவிடத்துத்தோன்றிய விடயபோதம் ஈதென்றும்) அறிந்து, (அவ்விந்திரியகரணங்களோடும் அப்போதத்தை நீத்து, தன்னை உள்ளபடி அறிந்து, அங்கனம் தன்னை அறிந்தபோது தனக்கு இந்திரிய கரணங்களையும் வேறாக்கித் தன்னையும் அறிவித்தது அருளெனக்கண்டு, அவ்வருளே வடிவாகி இருந்து, தான் மலமும் ஆகாமல் சிவமும் ஆகாமல் சிவானுபோகத்தில் இரண்டற அழுந்தி நிற்பது ஆன்மசுத்தி, இந்த ஆன்மசுத்தியே சிவத்தில் வியாபகமாகிய பேரறிவு ஆகலின் இப்பேரறிவாகி
நிறைந்து சிவந்தோயாமல் நின்றது போல் தோற்றம் முதல் ஐந்துடனும் தோயாமல் சுத்தத் துறவு- தனக்கு வியாத்தியாயிருந்த சிவம் எல்லாவற்றோடும் பூரணமாய் நிறைந்திருந்தும், ஒன்றோடுந் தோய்வற்று நின்றாற்போல சிருஷ்டியால் ஐந்தொழில்களோடும் தோயாமல் நிற்பதே பரிசுத்தமான துறவு.
(வி-ரை.) இச்சா ஞானக் கிரியைகள் சிவதத்துவங்களைச் செலுத்த, சிவதத்துவங்கள் கலாதிகளைச் செலுத்த, கலாதிகள் ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகளை எழுப்ப, ஆன்மாவின் இச்சை அந்தக்கரணங்களிடத்தும், ஞானம் ஞானேந்திரியங்களிடத்தும், கிரியை கன்மேந்திரியங்களிடத்தும் நின்று, விடயங்களை அறிந்து பற்றி அழுந்தும்
ஆகலின், இவ்விருவகை இந்திரியங்களும் கரணங்களும் நீங்கவே ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியை நீங்கும் இவை நீங்கவே கலாதிகள் நீங்கும், இவை நீங்கவே சிவதத்துவம் நீங்கும், இவை நீங்கவே ஆன்மா தன்னை அறியும், ஆகலின், “அறிந்து பற்றி நின்றழுந்து மற்பறிவை யறி ந்து’ என்றார்.
அவன் அவள் அது முன்னிலையாய் இதாகிதங்கள் வருதலையும், அவற்றைத் தான் பெறுதலையும் திருவருட் கண்ணால் பார்த்து அழித்துப் பேய் பிடியுண்டவனைப்போல் சிவத்துள் மறைந்து நின்றமையால், “தான் மலமும் ஆகாமல்” என்றும், அங்ஙனம் நின்று அழியாத ஆநந்தபோதம் பெறுதலால், தான் சிவமும் ஆகாமல்’ என்றும் இங்ஙனம் கூறப்படும்; இங்ஙனம் இருப்பது ஆன்மசுத்தியாகலின், “சுத்தி” என்றார்.
ஒன்றையும் பகுத்துக் காணாது வியாத்தியாய் நின்ற சூரியன் ஒளியில் வியாபகமாகிய கண்ணொளியும் ஒன்றையும் பகுத்துக் காணாது நிற்பது போல், ஒன்றையும் பகுத்தறியாது நின்ற சிவவியாத்தியில் வியாபகமாகிய ஆன்மாவும் பஞ்சகிருத்தியங்களால் விளங்கும் பிரபஞ்சங்களுள் ஒன்றையும் பகுத்தறியாது நிற்க வேண்டும் ஆகலின், “சிவம் தோயாம னின்றது போற் றோற்றமுதலைந் துடனுந் தோயா மற் சுத்தத் துறவு” என்றார்.
பஞ்சகிருத்தியங்களாவன, ஓர் இந்திரியத்தில் பிரவே சித்தல் சிருஷ்டி, அவ்விந்திரியத்தில் நின்று ஓர் விடயத்தைப்பற்றுதல் திதி, பற்றிய விடயத்து இரண்டற அழுந்துதல் சங்காரம், அதில் இதம் பிறத்தல் திரோபவம், அதனைத் தெளிந்து கோடல் அநுக்கிரகம். இங்ஙனம் ஓர் இந்திரியத்தில் பஞ்சகிருத்தியங்களும் வரலால் ஐந்திந்திரியங்களினும் தோயாமல் நிற்பதே ஐந்தொழிலினும் தோயாமல் நிற்பதென அறிக.
அறிந்து பற்றி நின்று அழுந்துதலை விடயபோதமென்று அறிதல் ஆன்மரூபம், அவற்றை நீங்கித் தன்னை அருளால் கண்டவிடம் ஆன்மதரிசனம், தான் மலமும் ஆகாமல் சிவமும் ஆகாமல் சிவத்தோடு இரண்டறக்கலந்து நிற்பது ஆன்மசுத்தி எனக் கொள்க.
இத்திருவெண்பாவால் பரிசுத்தமாகிய துறவு இது வென்று அறிவித்தவாறு காண்க.
ஞானிகள் இங்ஙனம் பிரபஞ்சத்தில் தோயாமல் நிற்பரோ எனின், மேற்கூறுகின்றார்.