ஒழுவிலொடுக்கம்

160. கூரிருளின் மின்மினியின் கூட்டம் போல் வாழ்சகத்தை

கூரிருளின் மின்மினியின் கூட்டம் போல் வாழ்சகத்தை
யாரறிவா ரந்த வறிவுதயம் – சூரியன்கா
ணுன்னீழ லைக்கெடுத்த வுச்சியிலே வூனமறச்
சொன்னா ரவத்தைகளைந் தும்.

(இ-ள்.) கூர் இருளில் மின்மினியின் கூட்டம் போல் வாழ் சகத்தை யார் அறிவார் அந்த அறிவு உதயம் சூரியன்- மழைக்காலத்து அரையிருளில் மின்மினிப் புழுக் கூட்டம் போன்று, ஆணவாந்தகாரத்தில் ஆன்மாக்கள் கிஞ்சிக்கிய போதத்தோடும் கூடிப் பொய்ம்மையாய் வாழாநின்ற இப் பிரபஞ்சத்தை ஞானிகளாயினோர் யாவர் அறிவார்? அவர் சகத்தோடுங்கூடி இருக்கையினும் அதனை அறியாரென்று நீர் கூறியது என்னை எனின். அவர்க்கு அந்த ஞானோதயம் சூரியோதயம் போல் தோற்றும் (ஆகலின், அச்சகத்தை அறியார், ஆயின் இந்த ஞானத்தை அடியேன் பெறுமாறு எங்ஙனம் எனின்),

உன் நீழலைக்கெடுத்த உச்சியிலே ஊனம் அற சொன்னார் அவத்தைகள் ஐந்தும் – காலையினும் மாலையினும் நீளும் உனது நிழலைக்கெடுத்த உச்சிக்காலத்தைப்போல் சகல கேவலங்களில் செல்லும் உன் போதம் அடங்கிய நடுவிடத்து உனது ஆணவக்குற்றம் அறவும் ஞானச்செல்வம் வரவும் ஏதுவாகச்சுத்தாவத்தைகள் ஐந்தினையும் சொன்னார் (பெரியர் ; அவற்றை யாம் சொல்லக் கேட்டு நீ அறிதி.)

(வி-ரை.) இருளைப்போல் ஆணவம், மின்மினிபோல் கருவிப்போதத்தோடுங் கூடிய ஆன்மாக்கள், மின்மினி மின்னியவாறே தோன்றாது மறைந்து மறைந்து மின்னல் போல, ஆன்மாக்களினது மறப்பு நினைப்புகள், ஆகலின், “கூரிருளின் மின்மினியின் கூட்டம் போல் வாழ்சகம்” என்றார்.

சூரியோதயத்தில் பூதவிருளும் மின்மினி ஒளியும் தோற்று; அதுபோல், ஞானோதயத்தில் ஆணவ இருளும் கருவிப்போதமும் தோற்றா ஆகலின், “அறிவுதயஞ் சூரியன் காண்” என்றார்.

இந்திரியங்கள் பத்தும் பஞ்ச பூதங்களிடமாய் நின்று, விடயங்களை நேரே அபகரித்து  விசற்கரிக்கப் பொருந்திய போதம் இறக்க இருந்த இடம் நின்மலசாக்கிரம்; அவ்விந்திரியங்களிடமாய் விடயங்களைப் பகுத்தறியப்பட்ட ஆன்மாவின் இச்சாஞானக் கிரியைகளுக்கு இடமாகிய மனம் புத்தி யகங்காரங்களின் வியாத்தி அறும் இடம் நின்மல சொப்பனம் ; ஆன்ம சைதன்னியத்திற்கு அதிட்டான மான சித்தவிகற்பம் ஒடுங்கின இடம் நின்மலசுழுத்தி, அச்சைதன்னிய வாகனமான பிராணவாயு நீங்கின இடம் நின்மலதுரியம்; ஊசல் வடம் அற்றபோது அதற்கு வீழ்ந்த இடம் ஆதாரம் ஆனாற்போல, இங்ஙனம் கருவிப்போதம் எல்லாம் கழிந்த இடத்து ஆன்மா அருள் ஆதாரமாய் நின்ற சுத்தாவத்தை நின்மலாதீதம்.

இக் கருவிப்போதங்கழன்ற சுத்தாவத்தையில், சுடர் காட்டக் கண்ட கண்போல், அருளால் தன்னை அறிவது நின்மல சாக்கிரம்; இங்ஙனம் தன்னை அறிந்த இடத்துத் தனக்கொரு சேட்டை அற்று அந்த அருளே தனக்கு ஆதாரமாய் அவ்வருளில் தான் அசைவறநின்ற இடம் அவ்வருள் தரிசனம், இங்ஙனம் இவ்வருளைத் தரிசிப்பது நின்மலசொப்பனம்: இச்சாஞானக்கிரியை தோன்றாது நின்ற இடம் பரை, இந்தப் பரையினது நின்மலமெல்லாம் தனது இச்சாஞானக்கிரியை தோன்றாது தனதாகி எதிரீடு சிறிதும் இன்றி இப்பரையே தானாகி இருந்த இடம் நின்மல சுழத்தி; தான் இப்பரையாகிய இடத்துக் கதிரொளி நேரே நின்ற கண் அக்கதிரிடத்து அதீதப்படுந் தறுவாயில் இக்கண்ணுக்கு அந்தக் கதிரினது வட்டப் பளபளப்பு மாத்திரந் தோன்றுவது போல், பரையை நீங்கி ஆநந்தசத்தி நேரே நின்று தான் சிவத்தில் அதீதப்படுந்தறுவாயில் ஆநந்தாநுபவம் பெறுவது நின்மலதுரியம்; அக்கதிரினது வட்டப் பளபளப்பாகிய சோபையைக் கண்ட கண் அக் கதிராகா திருக்கையிலும், தன்பார்வையையும் இழந்து தன்னால் காணப்பட்ட முதலையும் இழந்து அக்கதிர் தானாய் மிகவும் அதீதப்பட்டாற்போல், அங்ஙனம் ஆநந்தாநுபவம் பெற்ற ஆன்மா அந்த ஆநந்தமாகா திருக்கையிலும், அவ்வாநந்தா நுபவத்தை அறிந்த தானும் இன்றி ஆநந்தமாய் நின்ற முதலும் இன்றி அவ்வாநந்தமே தானாய் அதீதப் பட்ட இடம் நின்மலா தீதம்,

முன் சொன்ன ஐந்தும் கருவிகள் முப்பத்தாறும் நீங்குதற்கு ஏது, பின் சொன்ன ஐந்தும் தற்போதங்கெட்டுச் சிவத்தில் அதீதப்படுதற்கு ஏது. “சொன்னா ரவத்தைகளைந்தும்” என்றது இவையெனக் கொள்க.

“உச்சியிலே சொன்னா ரவத்தைக ளைந்தும்” என்றமையான், அவ்வுச்சி நேர்படுதற்கு ஏதுவாகிய அவத்தைகள் ஐந்தும் சொல்லப்பட்டன.

இருளைப்போல் கேவலம் ; உடுக்களைப்போல் சகலம் உடுஇன்றி இருளை மாத்திரம் காணும் கண்போலவும், இருளிடத்து உருவாற் காணுங் கண்போலவும் கேவல சகலங்களை அறியும் ஆன்மா ; சூரிய உதயத்தில் இருளும் உடுவும் இன்றிச் சூரியப் பிரகாசமாத்திரங் கண்ட கண்போல், அருள் தோற்றிய காலத்து முன் தோன்றிய கேவல இருளும் கருவிக்கூட்டங்களும் தோன்றாது, அவ்வருளை மாத்திரம் கண்டுகொண் டிருப்பது அருள் தரிசனம் ; சூரியப் பிரகாசத்தைக் கண்ட கண் புடைபெயர்ந்து நோக்காது அச்சூரியப்பிரகாசத்தில் ஏகீபாவமாய் நிற்பது போல், அருள் என்றும் தான் என்றும் சிறிதும் தோன்றாது அவ்வருளே தானாய் நிற்பது பரை தரிசனம்; சூரியப் பிரகாசத்தைவிட்டு அச்சூரியனது வட்டப் பளபளப்பைப் பார்த்த கண்போல், ஆன்மா பரையை நீங்கி ஆனந்தபோகம் பெறுதல், சூரியனது வட்டப் பளபளப்பைப் பார்த்த கண் தன் பார்வையும் இழந்து, அப்பளபளப்பாகிய காட்சியையும் இழந்து, அச்சூரியனுள் அதீதப்பட்டது போல், ஆநந்த போதத்தைப் பெற்ற ஆன்மா அதனைப்பெற்ற தான் என்ப தும் இவ்வாநந்தம் என்பதும் இன்றி அவ்வாநந்தந் தானாய் அதனுள் அதீதப்படுவது, ஈண்டு இருவகையாய்க் கூறிய அவத்தைகட்கு உவமை இதனானுங் காண்க.

இத்திருவெண்பாவால் ஞானிகள் உலகத்தை அறியார் என்றும், ஞானம் நின்மலாவத்தையில் நின்றால் பெறலாம் என்றும் அறிவித்தவாறு காண்க.

அந்த ஞானத்தை நீர் கூறிய நின்மலாவத்தையில் நின்று பெறுவதே அன்றி துறவின்கண் நின்று தவத்தைப் பண்ணிப் பெறக்கூடாதோ எனின், மேற்கூறுகின்றார்.