ஒழுவிலொடுக்கம்

165. தேடப்படும் பொருளைச் சிக்கன வாகப்புதைத்துக்

திருச்சிற்றம்பலம்

ஏழாம் அதிகாரம்

துறவு

எத்தனை உள் துறவு உடையார் ஆயினும் புறப்பற்றோடு இருப்பின், இப்பற்று ஒரோர் காலை அறிவை மயக்கும் ஆகலின், புறத்துறவும் வேண்டும் என்று இதனுள் புறத்துறவிலக்கணம் கூறினார். ஆகலின், இவ்வதிகாரத்திற்குத் துறவு என்று பெயராயிற்று.

தேடப்படும் பொருளைச் சிக்கன வாகப்புதைத்துக்
கோடிக் கொருநிமிடங் கொள்ளுகினுங் – கூடாத
வாணாளை வீண் கழிக்கு மானிடரைப் போன் மயக்கம்
பூணார்பொய் கண்டு துறப் போர்.

(இ-ள்.) தேடப்படும் பொருளைச் சிக்கனவாகப் புதைத்துக் கோடிக்கு ஒருநிமிடம் கொள்ளுகினும் கூடாத வாழ் நாளை வீண் கழிக்கும் – தம்மால் தேடப்பட்ட திரவியங்களையெல்லாம் செலவழியாது பத்திரமாகச் சேமஞ்செய்து வைத்துக்கொண்டு, தாம் உடலைவிட்டுப் போங்காலை ஒரு நிமிடகாலம் அவ்வுடலில் இருக்கக் கோடி திரவியத்துக்குப் பிறர்கையில் ஆயுள் வாங்கிக் கொள்ளுவோம் எனினும் கூடாத இவ்வுடலோடு உயிர் வாழ்நாளைத் தவத்திற் கழியாது அவத்திற்கழிக்கும்,

மானிடரைப் போல் மயக்கம்பூணார் பொய் கண்டு துறப்போர் – பேதை மானிடரைப்போல் தேகாதி பிரபஞ்சங்களை மெய்யாகக் கண்டு, இவற்றில் மயக்கம் பூணார்கள் இவற்றைப் பொய்யாகக் கண்டு துறப்போர்.

(வி-ரை.) கடவுளர் ஆயினும் அங்கனம் ஆயுள் கொடுக்கவும் கொள்ளவும் கூடாது ஆகலின், “கூடாத” என்றார்.

இத்திருவெண்பாவால் இளமைக்கண்ணே வனிதாதி போகங்களைத் துறந்து, ஞானாசாரியரை அடைந்து, வீடடைய வேண்டும் என்று கூறியவாறு காண்க.