ஊர்க்குருவியும் வளர்த்த குஞ்சு மொருமனையிற்
பாக்கனையும் பார்த்திது நம் பற்றென்னா – மூர்க்க
ரரிபிரம ரிந்திரர்கள் வாழ்வநித்த நம்வாழ்
வொருபொருளோ வென்றொழிவா ரோ.
(இ-ள்.) ஊர்க்குருவியும் வளர்த்த குஞ்சும் ஒரு மனையில் பாக்கனையும் பார்த்து இது நம்பற்று என்னா மூர்க்கர் – ஓர் மனையில் வாழாநின்ற ஊர்க்குருவியும், அது வளர்த்த குஞ்சுகளும், அம்மனையில் பூனையும், அப்பூனையினது குட்டிகளும், இளமையில் நல்வினைக்கீடாய்த் தம்முள் உறவாய்க்கூடி இருப்பதையும், முதிர்ந்தபோது தீவினைக் கீடாய் உறவாயிருந்த தாமே தம்முட்பகையாய்ப் பிரிந்து போவதையும், அம்மனையுள் இருந்து நாம் பார்த்திருந்தும், அங்கனம் வினைக்கீடாய் வரும் மனைவிமக்கள் முதலிய இப்பிரபஞ்சத்தினைத் துறவாது இதன் மேல் மனதுபற்றி இருத்தல் இது என்னைகொலோ? ஆயின், அவற்றைப் பார்த்திருந்தும் எல்லோரும் இல்வாழ்க்கையோடும் இருக்க இல்லையோ, நீர் இங்ஙனம் கூறியதென்னை எனின், அம்மனைவி மக்கள் முதலிய இப்பிரபஞ்சம் வினைக்கீடாய் வந்ததென்று அறியாது அப்பிரபஞ்சத்தோடுங் கூடி வாழ் பவர் மூர்க்கர்.
அரிபிரமர் இந்திரர்கள் வாழ்வு அநித்தம் நம் வாழ்வு ஒரு பொருளோ என்று ஒழிவாரோ-அப்பிரபஞ்சம் இரு வினைக்கீடாய் வந்ததென்று அறிந்த உத்தமராயினார் யாவர்க்கும் மேலாய அரி பிரமர் இந்திரர் முதலிய தேவர்கள் வாழ்வும் அநித்தியமென்று வேதாகமங்கள் கூறுதலான், நமது அற்பவாழ்வு இஃது ஓர் பொருளோ என்று கருதி, அப் பிரபஞ்சத்தைத் துறவாது ஒழிவாரோ?
(வி-ரை.) ஒருவன் நல்வினை அநுபவிக்குங் காலத்துத் தாய் தந்தை மனைவி மக்கள் சுற்றம் நட்பு இவர் முதலியோர் உறவாயிருந்து இதஞ்செய்வர், அவன் தீவினை அநுபவிக்குங் காலத்து அங்ஙனம் உறவாயிருந்தவர் தாமே பகையாய் அகிதஞ்செய்வர் ஆகலின், இவர் இருவினைக்கீடாய் வந்தவரென்று அறிந்து துறக்கும்படிக்கு அவைகளை உவமை கூறினார்.
இத்திருவெண்பாவால் மனைவியாதி குடும்பம் வினைக்கீடாய் வந்ததன்றித்தமக்கு உறவு அன்றென்பதும், அநித்தியம் என்பதும் அறிவித்தவாறு காண்க. இங்ஙனம் எல்லாவற்றையும் துறந்தவர் யாவர் எனின், மேற் கூறுகின்றார்.