ஆசையினா லற்பசுக மாயழிந்தாற் பேரின்ப
மாசையின் போக் கென்றறிய லாகாதோ – வாசை
நளிகைக் கழுக்குவந்த நாசமென நாடித்
தெளியப்போ மற்றிவையைந் தும்.
(இ-ள்.) ஆசையினால் அற்பசுகம் ஆய் அழிந்தால் பேரின்பம் ஆசையின் போக்கு என்று அறியல் ஆகாதோ- ஆசையினாலே போதஞ் சகமுகமாய்ச் சென்று விடயங்களில் அழுந்த, தமக்கு அவற்றுள் அற்பமாய சுகந்தோன்றி அழியும் ஆனால், இவ்வாசை நாசமே சிவத்தில் தோன்றும் பேரின்பம் பெறுதற்கு ஏது என்று அறியலாகாதோ? ஆயின், அவ்வாசை போமாறு எங்ஙனம் எனின்
ஆசை நளிகைக்கு அழுக்கு வந்த நாசம் என நாடித் தெளிய போம் மற்று இவை ஐந்தும் அவ்வாசை போதத்தின்கண் ஏறுவது நெய்யாதி வார்த்து அடைக்கும் மூங்கிற் குழாய்க்கு அழுக்கு வந்த நாசம்போல, தமக்கு நாசமாம் என விசாரித்தறிய, அவ்வாசையின் போதமாய் அவ்விடயங்களிற் பிரிந்து செல்லும் இவ்வைந்து அவாவும் நீங்கும்.
(வி-ரை.) ஆன்மா ஆசையினால் விடயத்தில் அழுந்திச் சிற்றின்பம் பெறுதல் போல், அவ்வாசை நாசத்தால் சிவத்தில் அழுந்திப் பேரின்பம் பெறும் ஆகலின், “பேரின்ப மாசையின் போக்கென் றறிய லாகாதோ” என்றார்.
தேன் நெய் எண்ணெயாதி வார்க்கும் மூங்கிற்குழாய்ச் சிறு துவாரத்தின் கண் மரவட்டை முதலிய நுழைந்தால் அதில் சுழல்வதே அன்றி, அழுக்கினால் மீளமாட்டா ஆகலின், முன்போல் தேனாதி வார்த்து அங்கீகரியாது அதனைப் புறம்பாய் விடப்படும். அதுபோல், ஆசை போதத்தில் ஏறி மிகுந்த போது எவ்விதத்தானும் மீளாது அதனால், அப்போதத்தில் வீட்டின்பத்திற்கு ஏதுவாய துறவு மெய்யுணர்வு முதலிய நற்குணங்கள் ஏறா, இக்குணங்கள் ஏறாமையின் முன்போல் பிறவித் துன்பத்தையே பெறும். ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார்.
நளிகையில் மரவட்டையாதி நுழையும்போது இன்பம் போல் எளிதில் நுழைந்து மீளமாட்டா. அதுபோல் போதத்தின் கண் ஆசை ஏறும்போது இன்பம்போல் தோன்றி, எளிதில் ஏறி மீளாமைக்குங் கொள்க.
நளிகை என்பது மூங்கிற்குழாய், அது திசைச்சொல்,
இத் திருவெண்பாவால் அவாவினால் அற்ப இன்பம் பெறுதல் போல், அவா அறுதியால் பேரின்பம் வரும் என்பதும், அவாவினால் தமக்கு நேரிடும் அர்த்தத்தை உண்மையாய் விசாரித்தறியின் அவ்வவாஅறுதி வரும் என்பதும் அறிவித்தவாறு காண்க.
இனித்துறவினது முடிவும், துறந்து செய்யும் தவத்தினது முடிவும், அடியேற்கு அருளிச்செய்ய வேண்டும் என்ற மாணாக்கனை நோக்கி மேற் கூறுகின்றார்.