உதயந் தொழப்போவார்க் குள்ளும் புறம்பும்
புதைய வொளி வீசுமா போலே – பதிமோகி
தீக்காட்டி லேகொடுக்கச் சென்றவா கண்டக்காற்
தாக்காத தன்றோ தவம்.
(இ-ள்.) உதயம் தொழாப் போவார்க்கு உள்ளும் புறம்பும் புதைய ஒளி வீசுமா போலே – சூரிய உதயம் தொழச்செல்வோர்க்கு உள்ளும் புறம்பும் இருள் மறைய ஒளி வீசு மாறு போலே, (மனை சுதர் முதலிய பற்றுக்கள் எல்லாவற்றையும் விட்டு, அவற்றின் மேல் உள்ளத்தெழும் அவாவினையும் அறுத்து, கண்ட விடயங்கள் மேற் சென்று பற்றும் இந்திரியங்களையும் அடக்கி, உள்ளும் புறம்பும் ஆசையாகிய இருளற நிராசையாகிய ஒளி வீச நிற்றலே துறவினது முடிவு).
பதி மோகி தீக்காட்டிலே கொடுக்கச் சென்ற ஆக கண்டக்கால் தாக்காதது அன்றோ தவம்- தனது புருடன் மேல் அதிமோகியாயிருந்துளாள் அவன் மரித்தகாலை அவனுக்குத் தன்னைக் கொடுக்கச் சுடுகாட்டிற் சென்றவாறு கண்டு (அவளைப்போலும் தற்போதத்தைச் சிவனுக்கு ஊணாகக் கொடுத்துத் தாம் ஒன்றோடும்) தாக்கற்றிருத்தல் அன்றோ தவத்தினது முடிவு?
(வி-ரை.) உதயந் தொழுவார்க்குக் கண் விழித்தபோதும் இமைத்தபோதும் ஒளிவீசுதல் போலும், துறந்தோர்க்குப் பொறிகளால் விடயங்களைக் கண்டபோதும் காணா திருந்தபோதும் உள்ளும் புறம்பும் நிராசையோடு இருக்க வேண்டும் ஆகலின், அங்ஙனம் உவமை கூறினார். தவமென் றமையால் துறவு வருவிக்கப்பட்டது.
இத்திருவெண்பாவால் உள்ளும் புறம்பும் நிராசையோடிருப்பது துறவினது முடிவென்பதும், போதம் ஒழிந்து ஒன்றோடும் தாக்கற்றிருப்பது தவமுடி வென்பதும் அறிவித்தவாறு காண்க.
இங்ஙனம் நிராசையோடிருந்தோர்க்குத் தற்போதம் அறுமோ என்ற மாணாக்கனை நோக்கி, மேற்கூறுகின்றார்.